சிங்கப்பூரின் முதல் சமூகப் பராமரிப்பு குடியிருப்புகளில் பராமரிப்பு வழங்கும் பகிர்வு சேவை
சிங்கப்பூரின் முதல் சமூகப் பராமரிப்பு வீடுகளில் வசிக்க விரும்பும் மூத்தோர், பராமரிப்பு வழங்கும் பகிர்வு சேவைக்கு 80 விழுக்காடு வரையிலான அரசாங்க மானியங்களைப் பெறத் தகுதி பெறுவர்.
குடும்ப வருமானம், எந்த மாதிரியான உதவி தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து மானியம் வழங்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித்தார். 'எச்டிபி ஹப்'பில் நடைபெறும் சமூகப் பராமரிப்பு வீட்டு கண்காட்சிக்கு வருகையளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் உள்ள முதல் தொகுதி வீடுகள் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களுக்கானவை.
அடுத்த மாதம் வெளியிடப்படும் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டத்தில் ஏறத்தாழ 160 இத்தகைய வீடுகள் விற்பனைக்கு விடப்படும். 2024ல் அவை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகிர்வு பராமரிப்பு வழங்கும் சேவைக்கான மாதக் கட்டணம், மானியத்திற்கு முன்பு ஏறக்குறைய $950. மூத்தோருக்கு உணவு ஊட்டிவிடும் சேவை தேவைப்பட்டால் மாதக் கட்டணம் ஏறத்தாழ $1,950ஆக இருக்கும்.
இந்தக் கட்டாய அடிப்படை சேவைத் திட்டத்தில் குடியிருப்பாளர்கள் அனைவரும் சேர வேண்டும். அதற்கான கட்டணத்தைத் தொடக்கத்தில் முழுமையாக செலுத்த வேண்டும்.
அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால் அதைப் பகுதியாக செலுத்திவிட்டு குத்தகைக்காலம் முழுவதும் மாதக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பகல்நேர சமூகப் பராமரிப்பு, உணவுச் சேவை, இல்லப் பராமரிப்பு போன்ற இதர சேவைகளுக்கும் மானியம் பொருந்தும்.
இத்திட்டத்திற்கு 15 ஆண்டுகால குத்தகைக்கான கட்டணம் $22,000ல் இருந்தும் 35 ஆண்டு குத்தகைக்கான கட்டணம் $59,000ல் இருந்தும் தொடங்குகிறது. 24 மணி நேர அவசரகால கண்காணிப்பு, பதில் நடவடிக்கை சேவை, அடிப்படை சுகாதாரப் பரிசோதனை, எளிமையான வீட்டுப் பழுதுபார்ப்புப் பணிகள், குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள சமூக இடங்களில் இடம்பெறும் நடவடிக்கைகள் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.

