கடல்துறையின் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கச் செய்யும் தொழில்துறை சார்பான அனைத்துலக பிரகடனத்தில் துறைமுக நடத்துநரான பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் கையெழுத்திட்டுள்ளது.
அதன் மூலம் கடலோடிகளுக்குத் தடுப்பூசி கிடைப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் உலகப் பொருளியல் கருத்தரங்கு அமைப்புடனும் மற்ற 17 பங்காளித்துவ அமைப்புகளுடனும் இணைந்து, கொவிட்-19 தடுப்பூசி உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதில் ஐக்கிய நாட்டின் யுனிசெஃப் அமைப்புக்கு ஆதரவளிக்க தான் உறுதியளித்திருப்்பதாக பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் நேற்று தெரிவித்தது.
கடலோடிகளின் நல்வாழ்வு மற்றும் சிப்பந்தி மாற்றம் தொடர்பிலான 'த நெப்டியுன் பிரகடனம்' இதுவரை 300க்கு மேற்பட்ட ஆதரவுக் கையெழுத்துகளைப் பெற்றுள்ளது.
அதன் மூலம் கடலோடிகளைப் பாதுகாக்கும் பொருட்டு நான்கு செயல்பாடுகளை இந்தப் பிரகடனம் வகுத்துள்ளது.
தடுப்பூசிகளைத் தவிர, கப்பல் நடத்துநர்களுக்கும் அதன் வாடகைதாரர்களுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும். அது அவர்களின் சுகாதார நடைமுறைகளுக்கும் சிப்பந்தி மாற்றத்துக்கும் உயர்ந்த தரநிலை அங்கீகாரத்தை அளிக்கும்.
அத்துடன் கடல்துறை மையங்களுக்கிடையே, கடலோடிகளுக்கு மேம்பட்ட ஆகாய இணைப்பையும் அது வழங்கும்.
"கடலில் அதிக காலம் பயணம் செய்யும் கடலோடிகள் உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைவார்கள். அது அவர்களின் செயல்திறனை அதிகம் பாதிக்கும்," என்று கூறிய பிஎஸ்ஏ, "கடலோடிகளை முன்களப் பணியாளர்களாகக் கொண்ட கடல்துறை, உலக வர்த்தகத்தில் 90 விழுக்காட்டை சுமந்து வருகிறது.
"அதில் கடல்துறை விநியோகத் தொடரின் பாதுகாப்புக்கும் நம்பகத் தன்மைக்கும் கடலோடிகள் முக்கிய பங்காற்றுகின்றனர்," என்றும் விவ ரித்தது.
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, கடந்த ஓராண்டில் பல துறைமுகங்களில் கடலோடிகள் கப்பலிலிருந்து தரையிறங்க மறுத்து அவர்களைத் திருப்பி அனுப்பியதால், கப்பலில் சிப்பந்திகள் மாற்றத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு விதிவிலக்காக சிங்கப்பூர் கப்பல் சிப்பந்திகள் மாற்றத்துக்கு முறையான வழிகளை வகுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 3,500 கப்பல்களின் 57,000 சிப்பந்திகள் பலன் அடைந்துள்ளனர்.
மேலும், துறைமுக ஊழியர்கள், துறைமுக மாலுமிகள், சரக்கு அதிகாரிகள் என கடல்துறையின் 10,000க்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடவும் பிஎஸ்ஏ திட்டமிட்டுள்ளது.
பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணிக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், சாதனங்களைக் கொண்டு வருவதற்கு கப்பல் சரக்கு முக்கிய பங்காற்று கிறது என்றும் பிஎஸ்ஏ சொன்னது.

