தமது முதலாளியிடம் இருந்து திருடியதாக விதிக்கப்பட்டிருந்த குற்றத்தீர்ப்பு மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் பணிப்பெண்ணான பார்தி லியானி சொந்த நாடான இந்தோனீசியா திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை இந்தோனீசியாவுக்குப் புறப்பட்டதாக திருமதி ஸ்டெஃபனி சோக் என்பவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
சுயேச்சை ஆய்வாளரான திருமதி சோக், சாங்கி விமான நிலையத்தில் பார்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் நேற்று வெளியிட்டார். இந்தப் படத்தில் இருக்கும் மற்றவர்கள், நீதிமன்றத்தில் பார்தியின் வழக்கு நடைபெற்றபோது அவருக்கு அவர்கள் ஆதரவளித்ததாக நம்பப்படுகிறது.
மறுபடியும் வேலை தேட சிங்கப்பூர் வருவதற்கான எண்ணம் பார்திக்கு இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருமதி சோக் கூறினார். எனினும், கூடுதல் வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் பார்தி சிங்கப்பூர் வருவார் என்று திருமதி சோக் சொன்னார்.
தமது முதலாளியிடம் இருந்து திருடியதாக தம் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் இருந்து பார்தி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு பலதரப்பிலிருந்தும் கவனத்தை ஈர்த்தது. குற்றவியல் நீதித் துறை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்பது மணி நேர விவாதத்திற்கு பார்தி வழக்கு வித்திட்டது.
இந்நிலையில், பார்தி மீது வழக்குடன் தொடர்புடைய அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர்கள் இருவர் ஒழுங்குமுறை விசாரணையை எதிர்கொள்கின்றனர். இந்த விசாரணையில் தம்மைப் பிரதிநிதிக்க இரு வழக்கறிஞர்களை பார்தி நியமித்துள்ளார்.
1997ல் பார்தி முதன்முறையாக சிங்கப்பூர் வந்தார். சாங்கி விமான நிலைய குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு லியூ மன் லியோங்கின் குடும்பத்தார் 2007ல் பார்தியைப் பணியமர்த்தினர்.
2016 அக்டோபர் 28ஆம் தேதி பார்தியை லியூ குடும்பத்தார் பணியில் இருந்து நீக்கினர். தங்களது வீட்டில் இருந்து $34,000க்கு மேல் மதிப்பிலான பொருட்களை பார்தி திருடியதாகக் கூறி போலிசிடம் அவர்கள் புகார் அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தமது முதலாளியிடம் இருந்து திருடியதாக பார்தி மீது மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கடந்த ஆண்டு பார்தி விடுவிக்கப்பட்டார்.

