சிங்கப்பூரில் முதல் ஃபைசர்-பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியை 113,000க்கும் மேற்பட்டோர் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. அவர்களில் 432 பேருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அவை பொதுவாக எல்லாத் தடுப்பூசிகளாலும் ஏற்படக்கூடிய வழக்கமான பக்கவிளைவுகள்தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம், காய்ச்சல், தலைவலி, சோர்வு, தலைசுற்றல், வாந்தி வருவது போன்ற உணர்வு, அரிப்பு மற்றும் கண்களிலும் உதடுகளிலும் ஏற்படும் வீக்கம் போன்ற ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தப் பக்கவிளைவுகள் சில நாட்களில் தானாகவே சரியாகிவிட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
மூன்று பேருக்கு மிகவும் மோசமான ஒவ்வாமை ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் குணமாகிவிட்டனர். அவர்கள் மருத்துவமனையில் ஒருநாள் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பிவிட்டதாக அமைச்சு கூறியது. பாதிக்கப்பட்ட மூவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்கள். அவர்களுக்கு அரிப்பு, முச்சுத் திணறல், உதடு வீக்கம், தொண்டையில் இறுக்கம், தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
"தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த மூவரிடம் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் உடனடியாகக் கண்டு
பிடிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது," என்று அமைச்சு தெரிவித்தது. வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பலதுறை மருந்தகங்களிலும் முதியோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் சேவை வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. தற்போது ஒன்பது பலதுறை மருந்தகங்கள், 21 பொது சுகாதார தயார்நிலை மருந்தகங்களில் மட்டுமே முதியோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.