கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் டெங்கி காரணமாக மூன்று பேர் மாண்டனர்.
இவர்களுடன் சேர்த்து டெங்கி காரணமாக கடந்த ஆண்டு மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர்.
2005ஆம் ஆண்டில் டெங்கி காரணமாக 25 பேர் மாண்டனர். அதற்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் ஆக அதிகமானோர் அந்நோயின் காரணமாக மாண்டனர்.
பெரும்பாலான ஆண்டுகளில் டெங்கி காரணமாக 10க்கும் குறைவானோர் மரணம் அடைந்தனர்.
கடந்த ஆண்டில் கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 29 பேர் மாண்டனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றைவிட டெங்கியால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கடந்த ஆண்டு டெங்கியால் மாண்டவர்கள் 25 வயதிலிருந்து 92 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 13 பேர் டெங்கியால் மாண்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிட்டுள்ள காலாண்டு அடிப்படையிலான கண்காணிப்பு தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் 35,315 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டது.
2019ஆம் ஆண்டில் பாதிப்
படைந்தோரைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம்.
2013ஆம் ஆண்டில் பதிவான 22,170 பேரைவிட இது 60 விழுக்காடு அதிகம்.
டெங்கியால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒருவர் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
டெங்கியின் காரணமாக வாந்தி, சோர்வு, உடல்வலி. மூட்டு வலி ஏற்படக்கூடும்.
நிலைமை மோசமடைந்தால் ஈறுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் அல்லது உடலுக்குள் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இம்மாதம் குறைந்துள்ளபோதிலும் 2017, 2018 ஆகிய ஆண்டுகளைவிட அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொசுக்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் எட்டு விழுக்காடு அதிகரித்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

