உட்லண்ட்சில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டத்தின் நில அகழ்வு நடைபெற்ற ஒரு வாரத்துக்குப் பிறகு அதன் கட்டுமானத்துக்கான இரண்டாம் சிவில் குத்தகை நேற்று வழங்கப்பட்டது.
இரு நாடுகளையும் இணைக்கும் 25 மீட்டர் உயரமுள்ள சிங்கப்பூர் பகுதியில் உள்ள கடல் மேம்பாலம், ரயில் தடங்களை இணைக்கும் சுரங்கங்கள் ஆகியவற்றைக் கட்டும் $180 மில்லியன் மதிப்பிலான குத்தகை சிங்கப்பூரில் கிளை நிறுவனம் கொண்டுள்ள 'சைனா கம்யூனிக்கேஷன்ஸ் கன்ஸ்டிரக்ஷன்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
அந்நிறுவனம் தற்போது ஜூரோங் வட்டாரப் பாதையில் உள்ள பூன்லே நிலையத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறது.
சீனா, கென்யா போன்ற நாடுகளில் ரயில் கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றியுள்ள அந்நிறுவனம், சிங்கப்பூர் பகுதியில் உள்ள கடல் மேம்பாலம், ரயில் தடங்களை இணைக்கும் சுரங்கங்கள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளை இவ்வாண்டின் அடுத்த காலாண்டில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் நீரிணையில், சிங்கப்பூர் பகுதியில் உள்ள கடல் மேம்பாலம் சிங்கப்பூரின் நிலப் பகுதியை அடைந்தவுடன் உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி முனையத்துடன் இணைக்கும் சுரங்க ரயில் பாதையுடன் இணையும்.
நான்கு கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரயில் இணைப்பு வரும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகார் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கின.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு திசையில் 10,000 பேர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இணைப்பு ரயில் பயணம் ஐந்து நிமிடங்கள்தான் நீடிக்கும்.
இந்த ரயில் இணைப்பு ஜோகூர் கடற்பாலத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். கொவிட்-19 முந்திய காலத்தில் நாள்தோறும் 300,000 பேர் கடற்பாலத்தைக் கடந்து செல்வர்.
இத்திட்டத்தில் $932.8 மில்லியன் மதிப்பிலான முதலாவது சிவில் குத்தகை பென்டா-ஓஷியன் கட்டுமான நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்டது.
அந்நிறுவனம் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் முனையம், அதனுள் இருக்கும் சுங்கத்துறை, சோதனைச் சாவடி கட்டடம், சுரங்கப் பாதை ஆகியவற்றைக் கட்டும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

