பின்தங்கியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் 'ஸ்பிக் & ஸ்பேன்' தூப்புரவு நிறுவனத்துக்கு நேற்று வருகை மேற்கொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப், இன்னும் அதிகமான சமூக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்கள் வர்த்தகத்தை மேற்கொண்டு அதன் மூலம் நல்ல காரியங்களைச் செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த கொவிட்-19 காலத்தில், தங்கள் நேரத்தைப் பயன்படுத்தி வேலை செயல்முறையையும் வேலை களையும் மறுவடிவமைத்து, அவற்றை எதிர்காலத்தில் பயன்படும் வேலைகளாக உருமாற்றி, அவற்றின் மூலம் பின்தங்கியவர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள பங்களிக்கலாம் என்று திருவாட்டி ஹலிமா விவரித்தார்.
காலாங் பிளேஸில் உள்ள ஸ்பெக்கோ எக்ஸ்பீரியன்ஸ் நிலைய காட்சியறைக்குச் சென்ற அதிபருக்கு அந்த சமூக நிறுவனத்தின் புதிய பொருட்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அதிபர் அந்நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேசி அவர்களின் அனுபவத்தையும் தெரிந்துகொண்டார்.
பின்னர் அந்நிறுவனத்துக்கு தாம் மேற்கொண்ட வருகை பற்றி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட திருவாட்டி ஹலிமா, "ஸ்பிக் & ஸ்பேன் நிறுவனம், முன்னாள் கைதிகள், மனநலம் மற்றும் உடல் அளவில் குறை உள்ளவர்கள் போன்ற பின்தங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருப்பதைக் கண்டு மனநிறைவடைந்தேன். இது அவர்கள் ஒரு கண்ணியமான வருமானத்தை ஈட்டி, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்பளித்திருக்கிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.
ஸ்பிக் & ஸ்பேன் நிறுவன ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். அந்நிறுவனம், 60க்கு மேற்பட்ட சமூக சேவை அமைப்புகளுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது ஊழியர்களில் 300க்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி, திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
அத்துடன் தாதிமை இல்லங்களில் உள்ள 64,000 முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கும் சிறிய நடுத்தர நிறுவனங்களிலும் கிருமி நீக்கப் பணியை இலவசமாக செய்து வரு கிறது.

