பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு செவ்விசை கற்பிக்கும் முயற்சியில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இணைவுடன் தமிழிசைப் பள்ளி ஒன்றை சிங்கையில் தொடங்கியுள்ளது தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம்.
இதன் தொடக்க விழாவும் இணையப் பக்க வெளியீட்டு விழாவும் இம்மாதம் 23ஆம் தேதியன்று சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சுப. திண்ணப்பனின் தலைமையில் நடைபெற்றது. செல்வி பூங்குழலியின் வாழ்த்துப் பாடலுடனும் திரு சம்பந்தம் செந்திலின் வரவேற்புரையுடனும் விழா தொடங்கியது.
தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் திண்ணப்பன், தமிழிசை ஆராய்ச்சி முன்னோடிகளை நினைவுகூர்ந்தார். தமிழில் இசை கற்க வேண்டியதன் அவசியத்தையும், தமிழ் மரபு தொடர வேண்டியதையும் வலியுறுத்திப் பேசினார்.
சிங்கப்பூரில் தமிழிசைப் பள்ளி யின் அவசியத்தையும் அது தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தின் தலைவர் திரு புருஷோத்தமன் விளக்கினார்.
தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் பேராசிரியர் பெ. கோவிந்தசாமியின் சார்பில் பேராசிரியர் தமிழ்வேல், பேராசிரியர் திண்ணப்பனுடன் இணைந்து தமிழிசைப் பள்ளியின் இணையப் பக்கத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, திருமதி மீனாட்சி சபாபதி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மு. இளங்கோவன், உள்ளூர் கவிஞர், எழுத்தாளர் திரு மா. அன்பழகன், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு தனபால் குமார், தமிழிசை ஆராய்ச்சியாளர் முனைவர் கலைவாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவை திரு முருகுதமிழ் அறிவன் தொகுத்து வழங்க திரு ப. கருணாநிதியின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
இப்பள்ளியின் மூலம் சிங்கையில் உள்ள மாணவர்கள், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, பரதநாட்டியம் ஆகிய கலைகளைப் பயின்று, தமிழ்ப் பல்கலைக்கழக படிநிலைத் தேர்வில் கலந்து கொண்டு பல்கலைக் கழகச் சான்றிதழ்களைப் பெற இயலும்.
மேலும், பறையாட்டம், கரகாட்டம், சிலம்பம், தவில், நாதஸ்வரம் ஆகிய தமிழ்க் கலைகளை குறுகிய கால வகுப்புகளாகப் பயிலலாம்.
மேல் விவரங்களுக்கு தமிழிசைப் பள்ளியின் இணையப் பக்கத்தை நாடலாம். அதன் இணைய முகவரி: isai.thhs.org.sg

