சிங்கப்பூர் பெண்ணை பாலியல் ரீதியாகவும் பணம் கேட்டும் மிரட்டி துன்புறுத்திய ஆடவர் மலேசியாவில் கைது

சிங்கப்பூர் பெண்ணை பாலியல் ரீதியாகவும் பணம் கேட்டும் மிரட்டி துன்புறுத்திய ஆடவர் மலேசியாவில் கைது

2 mins read
7f7df2aa-7a3c-44e0-b7a2-70cc98e54618
-

இணையச் செயலி வழியாக நட்பு கொண்டு பல பெண்களை மிரட்டி பாலியல் ரீதியான சலுகைகள் பெற்றதுடன் மிரட்டி பணமும் வசூலித்த 33 வயது ஆடவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.

முன்னர் அந்தப் பெண் அனுப்பிய காணொளிகளை வைத்து மிரட்டி, அந்தப் பெண்ணை மலேசியாவுக்கு வருமாறு அந்த ஆடவர் வற்புறுத்தியதாக சிங்கப்பூர் போலிஸ் படை இன்று (ஜனவரி 30) தெரிவித்தது.

மேலும், அந்தக் காணொளி பரவுவதைத் தடுக்க, அந்த ஆடவர் அளித்த வங்கிக் கணக்குக்கு $200,000 பணத்தை மாற்றிவிட்டார் அந்தப் பெண்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அந்தப் பெண் போலிசில் புகார் அளித்தார்.

'டேட்டிங்' செயலி ஒன்றின் வழியாக அந்த ஆடவர் அறிமுகமானதாகக் குறிப்பிட்ட அந்தப் பெண், தன்னுடைய அந்தரங்க காணொளிகளை அனுப்புமாறு ஆடவர் கோரியதாகச் சொன்னார்.

அவற்றை அனுப்பிய பிறகு, இருவரும் மலேசியாவில் சந்திக்க ஏற்பாடானது.

மலேசியாவுக்குச் சென்ற அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த வாகனத்தின் ஓட்டுநருடன் பாலியல் உறவு கொள்ளவும் வற்புறுத்தப்பட்டார் அந்தப் பெண். இல்லாதபட்சத்தில் அவர் அனுப்பிய காணொளிகளை பரப்பப்போவதாக மிரட்டப்பட்டார்.

அந்தப் பெண் சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகும் இத்தகைய மிரட்டல்கள் தொடர்ந்தன. காணொளியைப் பரப்பாமல் இருக்க பணம் கோரினார் அந்த ஆடவர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அந்த மாது $200,000யை ஆடவரின் கணக்குக்கு மாற்றி விட்டார்.

மலேசியாவில் கார் ஓட்டுநராக வந்து மாதுடன் பாலியல் உறவு கொண்டவர்தான் அந்தப் பெண்ணை மிரட்டிய நபர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வேறு பல பெண்களையும் அந்த ஆடவர் இதுபோல மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.

மலேசிய போலிசாருடன் இணைந்து சிங்கப்பூர் போலிசார் அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்தனர்.

ஆடவர் மீது இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்