சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் பாதுகாப்புடன் புனிதமிக்க இடங்களாக தொடர்ந்து இருந்து வரும் என்று முஸ்லிம் தலைவர்கள் மறுஉறுதி தெரிவித்து இருக்கிறார்கள் என்றாலும் தங்களுடைய அவசரகால ஆயத்தநிலை ஆற்றலைப் பள்ளிவாசல்கள் தொடர்ந்து பலப்படுத்தி வரும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகச் சபை உறுப்பினர்களின் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய முயிஸ் அமைப்பின் தலைமை நிர்வாகியான ஈசா மசூது, இதர அமைப்புகளுடன் சேர்ந்து சமூகத்துக்குச் சேவையாற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தும்படி பள்ளிவாசல் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
நம் பள்ளிவாசல்கள் நம் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தொடர்ந்து பாதுகாப்பான, புனிதமான இடமாகத் திகழ்வதை உறுதிப்படுத்துவதில் பள்ளிவாசல் தலைவர்கள் உயிர்நாடியாக பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
"வருங்காலத்திலும் நாம் தொடர்ந்து நமது அவசரகால ஆயத்தநிலை ஆற்றலை மிக முக்கியமாகக் கருதி பலப்படுத்தி வருவோம்," என்றார் திரு ஈசா.
டன்லப் ஸ்திரீட்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் அவர் உரையாற்றினார்.
இங்குள்ள பள்ளிவாசல்கள் தங்களுடைய அவசரகால ஆயத்தநிலை ஆற்றல்களை 2017 முதலே பலப்படுத்தி வந்திருப்பதாக முயிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பயிற்சிகள், அவசரகால பயிற்சிகள் ஒருபுறம் இருக்க, பள்ளிவாசல்களில் பாதுகாப்பு மிரட்டல்களைக் கண்காணிக்கும் வகையில் தனிப்பட்டவர்களைத் திரட்டும் ஒருங்கிணைந்த முறை ஒன்றும் நடப்பில் இருந்து வருகிறது.
அனைத்துவகை பயங்கரவாதத்தையும் வன்செயல்களையும் சமூகம் கண்டிப்பதாகவும் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அத்தகைய செயல்களுக்கு எந்த சமயத்திலும் இடமில்லை என்றும் திரு ஈசா குறிப்பிட்டார்.
பல சமய சமூகங்களுக்கிடையே அணுக்கமான பிணைப்பை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த 16 வயது இளைஞர் ஒருவர் திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்ததை அடுத்து முயிஸ் தலைமை நிர்வாகியின் இந்தச் செய்தி இடம்பெற்று இருக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த சிங்கப்பூர் இளைஞர், புராடெஸ்டன்ட் கிறிஸ்துவர்.
"அவர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியான பிறகு நாங்கள் எங்கள் பள்ளிவாசல்களுக்கு கிறிஸ்துவ தலைவர்களை அழைத்து தோழமை உணர்வை மறுஉறுதிப்படுத்தினோம். வன்செயல் மிரட்டல்கள் நம்மைப் பிரித்துவிடாது என்பதை அதன்மூலம் வெளிப்படுத்தினோம்," என்று திரு ஈஷா குறிப்பிட்டார்.
"இத்தகைய திட்டமிடப்பட்ட சதித்திட்டம் போல் நம் சமூகத்திற்கு மிரட்டல் விடுக்கப்படும் போது நாம் ஐக்கியத்தை பலப்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.
"வெறுப்புணர்வை உண்டுபண்ணும் செய்திகள் நம்மை பிரித்துவிட ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது," என்று திரு ஈஷா வலியுறுத்திக் கூறினார்.
மூன்று பள்ளிவாசல்களைச் சேர்ந்த 39 தொண்டூழியர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகச் சபை உறுப்பினர்களாக நியமன கடிதங்களைப் பெற்றனர்.

