சிங்கப்பூரில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தீவெங்கும் உள்ள சாலைகளில் சாதனை அளவில் 2,570 குழிகள் தோன்றின.
இது பொதுவாக ஈரமான பருவநிலையின்போது பெய்யும் மழையால் தோன்றும் சாலைக் குழிகளைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கடந்த மாதம் வழக்கத்துக்கு மாறாக தொடர் கனமழை பெய்தது என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்பற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட்டும் ராடின் மாஸ் தனித் தொகுதி உறுப்பினர் மெல்வின் யோங்கும் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், நேற்று முன்தினம் வரை சாலைக் குழிகளில் 95%க்கு மேற்பட்டவை சரிசெய்யப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்.
சாலைகளில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று அடையாளம் காணப்பட்ட குழிகளுக்கு முன்னுரிமை அளித்த நிலப் போக்குவரத்து ஆணையம் அவற்றை முதலில் சீர்செய்தன என்றும் எஞ்சிய சாலைக் குழிகளைச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் அமைச்சர் விவரித்தார்.
"பொதுவாக, சாலைக் குழிகளை 24 மணி நேரத்துக்குள் ஆணையம் சரிசெய்துவிடும். ஆனால், ஜனவரி மாதத்தில் அவற்றை சரிசெய்ய ஆணையம் தனது ஆள்பலத்தை மும்மடங்கு அதிகரித்தது.
"சாலைக் குழிகளை மூடியவுடன் அவை காய்வதற்கு சில மணி நேரம் ஆகும். ஆனால் தொடர் கனமழை அதற்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது," என்றும் டாக்டர் கோர் கூறினார்.
சாலைகளில் அதிகம் காணப்படும் குழிகளால் வாகனமோட்டிகளும் மோட்டார்சைக்கிளோட்டி களும் கவலை கொண்டனர்.
தொடர் கனமழையால், சாலை விரிசல்களில் நீர் ஊடுருவும். அதன் மீது வாகனங்கள் தொடர்ந்து செல்வதால், விரிசல்களுக்குள் தேங்கியுள்ள நீர் மேலும் ஆழமாகச் சென்று விரிசல்களைக் கடுமையாக்கி, குழிகளை உண்டாக்கும்.
"தீவெங்கும் உள்ள 9,000 கிலோ மீட்டர் தடச் சாலைகளில் கோளாறுகள் உள்ளனவா என்பதை நிலப் போக்குவரத்து ஆணையம் வழக்கமாக மேற்கொண்டு வருகிறது.
"விரைவுச்சாலைகளை வாரத்துக்கு ஒரு முறையும், பிரதான சாலைகளை இரு வாரங்களுக்கு ஒரு முறையும், மற்ற சாலைகளை எட்டு வாரங்களுக்கு ஒரு முறையும் அது சோதிக்கிறது," என்று அமைச்சர் சொன்னார்.
மண் சரிவு பற்றி பேசிய டாக்டர் கோர், "பொதுச் சாலைகளுக்கு அருகில் உள்ள சுமார் 200 சரிவு நிலங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சோதிக்கப்படுகின்றன. கடும் மழையின் காரணமாக அதிக சரிவுள்ள நிலங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால் அது வாரத்துக்கு ஒரு முறை சோதிக்கப்படும்.
"சாலைக் குழிகள், மண் சரிவு என்று எதுவாக இருந்தாலும் அவற்றை உடனடியாகச் சரிசெய்து அவற்றின் மூலம் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாமல் உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை," என்றும் அமைச்சர் விளக்கினார்.

