சிங்கப்பூரின் தேசிய தொடர்பு தடமறியும் டிரேஸ்டுகெதர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள், போலிஸ் தனது புலனாய்வுக்குப் தடமறியும் தரவைப் பயன்படுத்தும்போது அதற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்யும் என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்துள்ளார்.
டிரேஸ்டுகெதர் தரவைப் பயன்படுத்தும்போது அது மக்களின் அந்தரங்கத்துக்கு பாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது திரு டான், மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான ஏழு குற்றங்களின் புலனாய்வுக்கு மட்டுமே அத்தரவுகள் பயன்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.
ஒரே நாடாளுமன்ற அமர்வில் மசோதாவின் மூன்று வாசிப்புகளும் அவசரமாக இடம்பெறும் வகையில் அதிபரின் ஒப்புதல் சான்றிதழ் பெறப்பட்டது.
துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துதல், பயங்கரவாதம், கொலை, மரண தண்டனைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் குற்றங்கள், கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகிய ஏழு குற்றங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உடனடி மிரட்டல் விடுப்பவை என்று விவரிக்கப்பட்டது.
இந்தக் குற்றங்கள் தொடர்பான டிரேஸ்டுகெதர் தரவுகளை இன்ஸ்பெக்டர் நிலை அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள மூத்த போலிஸ் அதிகாரிகள் மட்டுமே கோர முடியும் என்றும் அமைச்சர் சொன்னார்.
இது நிதிக் கழகங்களிடமிருந்து வங்கித் தரவுகளைப் பெறும்போதும் உள்ள விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்கும். குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பில் இத்தகைய கோரிக்கையை சார்ஜண்ட் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள போலிஸ் அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“மேலும் தொடர்பு தடமறியும் தரவுகளின் பயன்பாட்டை குற்றவியல் புலனாய்வுப் பிரிவு அனுமதிக்க வேண்டும். அந்தத் தரவை அளிக்கும் அதிகாரி அது கடுமையான குற்றங்கள் தொடர்பிலான புலனாய்வுக்குத்தான் தேவைப்படுகின்றன என்று உறுதி செய்த பிறகுதான் அதைக் கொடுப்பார். கூடுதல் பாதுகாப்பு அம்சமாக, பெறப்பட்ட அனைத்து தரவுகளும் மிக ரகசியமாகக் கட்டிக்காக்கப்படும்,” என்றும் திரு டான் வலியுறுத்தினார்.
குறிப்பிடப்பட்ட ஏழு கடுமையான குற்றங்கள் தவிர்த்து மானபங்கம், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற மற்ற வகை குற்றங்களுக்கும் தரவுகள் பயன்படுத்தப்படுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திரு டான், “அத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்க இத்தரவுகள் நிச்சயமாகப் பயன்படும் என்றாலும் அந்தக் குற்றங்கள் பொதுச் சுகாதாரத்துக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடியதா என்பதை போலிஸ் மதிப்பிட்டு பார்க்கும்.
“மானபங்கம், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையானவைதான் என்றாலும் அவை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு குற்றங்களின் கடுமைக்குக் கீழ்தான் உள்ளன,” என்று திரு டான் விளக்கினார்.
பொங்கோல் கொலையின் புலனாய்வில் தரவின் பயன்பாடுகடந்த ஆண்டு மே மாதம் பொங்கோல் ஃபீல்டு பகுதியில் நிகழ்ந்த கொலையின் புலனாய்வில் டிரேஸ்டுகெதர் தரவுகள் பயன்படுத்தப்பட்டதை அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பின்படி தரவுகள் கோரப் பட்டன. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரின் திறன்பேசியில் டிரேஸ்டுகெதர் செயலி பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்பதால் அவரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், கொலை செய்யப்பட்டவரின் திறன்பேசியில் உள்ள டிரேஸ்டுகெதர் தரவுகள் மூலம் சில முக்கிய தடயங்கள் கிடைத்தன என்றும் திரு டான் விவரித்தார்.