கொவிட்-19 தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல் பரவுவதை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்றும் தேவைப்படும்போது அத்தவறான தகவலுக்கு எதிராகச் சட்டத்தின் முழு சக்தியையும் பயன்படுத்த அரசாங்கம் தயங்காது என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
கடந்த ஓர் ஆண்டில் கொரோனா கிருமி பற்றிய 60க்கும் மேற்பட்ட ஊகங்கள், வதந்திகள், மோசடிகள், பொய்ச்செய்திகளுக்கு எதிராக அரசாங்கம் பலவிதமான நடவடிக்கைகளைக் கையாண்டுள்ளது.
இதில் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் (பொஃப்மா) உள்ளிட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்கூறுவதும் அடங்கும்.
பொஃப்மா அலுவலகம் அத்தகைய தகவல்களைக் கையாள நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கிறதா என்ற பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூவின் (செங்காங் குழுத்தொகுதி) கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரன், கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்த்துப் போராடுவதில் தவறான தகவல்கள் கடும் சவாலாக உள்ளன என்றார்.
நம்பகமான வளங்களிலிருந்து துல்லியமான தகவல்களைச் சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் சிங்கப்பூரர்களுக்கு வழங்குவதை அரசாங்கம் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.
எடுத்துக்காட்டாக, தகவல்களும் தெளிவுபடுத்தல்களும் தொடர்ந்து ஊடகங்கள், அரசாங்க இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் சேனல்களில் உள்ள அரசு ஊடகங்கள் வழி தெரிவிக்கப்படுகின்றன.
தடுப்பூசித் திட்டத்தைப் பொறுத்தவரையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் அடைய வேண்டும் என்பதற்காக கொவிட்-19 தடுப்பூசிகளைப் பற்றிய அத்தியாவசிய தகவல்கள் ஏற்கெனவே பல தளங்களில், பல மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
சுகாதார அமைச்சின் இணைத்தளம் உள்ளிட்ட அதிகாரபூர்வத் இணையத்தளங்களைத் தங்களின் தளங்களில் சேர்த்துக்கொள்ள அரசாங்கம் பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது என்றார் அவர்.
முதியோருக்கான தடுப்பூசித் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அது குறித்து முதியோருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்த, மக்கள் கழகமும் மூத்த தலைமுறைத் தூதர்களும் வீடு வீடாகச் செல்லவிருக்கின்றனர்.
பொய்ச்செய்திகள் பரவாமல் தடுக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கு உள்ளது என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

