பருவநிலை சவால்களை எதிர்கொள்ள, கரிம வரியை அதிகரிப்பது, பொதுத் துறையின் நீடித்த நிலைத்தன்மை தரநிலையை உயர்த்துவது, பருவநிலை குறித்த கல்வியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் நேற்றுமுன்தினம் வைத்தனர்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சிகளை தீவிரப்படுத்தவும் விரைவுபடுத்தவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘பருவநிலை மாற்றத்தை உலக அளவிலான பிரச்சினையாகவும் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாகவும்’ அத்தீர்மானம் குறிப்பிடுகிறது. இதில் தனியார் துறை, சிங்கப்பூர் மக்கள், பொது சமூகம் ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கம் பணியாற்ற வேண்டும் என்று மன்றம் கேட்டுக்கொண்டது. முன்னதாக, மக்கள் செயல் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் முன்வைத்த தனிப்பட்ட உறுப்பினர் தீர்மானம் குறித்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் உறுப்பினர்கள் விவாதித்தனர்.
பருவநிலை மாற்றத்திலிருந்து நாம் தப்ப முடியாது“உயர்ந்த பொறியியல், உயர்தர வடிவமைப்பு மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என எதிர்பார்க்க முடியாது. உலகமயமாவதில் பருவநிலை மாற்றம் நமது வாழ்வாதாரங்களையும் அமைதியையும் பாதிக்கும் வழிகளைக் கண்டறியும்,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினருமான லூயிஸ் இங் கூறினார்.
மேலும், இத்தீர்மானம் அனைத்துலகக் கடமைகளை நிறைவேற்றுவதில் சிங்கப்பூரின் நற்பெயரை நிலைநிறுத்துகிறது என்றும் அவர் கூறினார். பொதுச் சேவையில் நீடித்த நிலைத்தன்மை தரத்தை உயர்த்துவது அவர் முன்மொழிந்த பரிந்துரைகளில் ஒன்று.
“கல்வி விளைவுகளின் முக்கியமான ஒன்றாக நிலைத்தன்மை விளங்கும் வகையில் தற்போதைய பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்வதையும் ‘முழுமையான அணுகுமுறை’ மூலம் பொறுப்பான பழக்கங்களை வளர்ப்பதையும் அரசாங்கம் பரிசீலிக்குமா என்று எம்பி நடியா சாம்டின் (அங் மோ கியோ குழுத்தொகுதி) கேட்டார்.
புவியியல், அறிவியல் பாடங்களில் மட்டுமே பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பொருளியல் பாதிப்பு, சமூக நீதி போன்றவை பற்றிப் பேசப்படுவதாகவும் எல்லா மாணவர்களுக்கும் இது குறித்துப் பேச வாய்ப்புக் கிடைப்பதில்லை என்றும் அவர் சொன்னார். மாணவர்கள், பாடப் புத்தகங்களில் படித்தாலும் தம்மைச் சுற்றி உள்ளவர்களும் அதிகளவு நிலைத்தன்மையற்ற வாழ்க்கைமுறையையே பின்பற்றுவதை அவர்கள் காண்கிறார்கள் என்றார் அவர்.
வசதி குறைந்தோரும் பருவநிலை மாற்றமும்வசதி குறைந்தவர்கள் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை சமமற்ற வகையில் எதிர்கொள்வர் என்று பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லியோன் பெரேரா (அல்ஜுனிட் குழுத்தொகுதி) கூறினார்.
எடுத்துக்காட்டாக, புதிய வீட்டிற்கு மாறுவது, வீட்டில் குளிர்சாதன வசதியை அல்லது காற்றை வடிகட்டும் வசதியைப் பொருத்துவது, மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றுக்கு குறைந்த வளங்களையே அவர்கள் பெற்றிருப்பர் என அவர் விளக்கினார்.
அத்துடன், சில புவியியல் பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான முயற்சிகளில் இவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற அவர், வீவக அடுக்குமாடிகளுக்கு, குறிப்பாக வாடகை வீடுகள், வசதி குறைந்தோர் அதிகம் வாழும் தொகுதிகளிலுள்ள வீடுகளுக்கு வெப்பத்தை உள்ளிழுக்காத சாயம் பூசுவது போன்ற கொள்கைகளைப் பரிந்துரைத்தார். கோல்ஃப் திடல்களுக்கு ஒதுக்கப்படும் நில அளவையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் அவர். தற்போது சிங்கப்பூரின் நிலப்பரப்பில் 1,500 ஹெக்டர், அதாவது கிட்டத்தட்ட 2% கோல்ஃப் திடலாக உள்ளதை அவர் குறிப்பிட்டார்.
காடுகளின் முக்கியத்துவம்சிங்கப்பூரில் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். திரு கிறிஸ்டோபர் டி சூசா (ஹாலந்து - புக்கிட் தீமா), சிங்கப்பூர் காடுகளை ‘சொத்துக்கள்’ என்று கருதும் நாடாக வேண்டும், காடுகளைப் பாதுகாப்பதுடன் அதன் பல்லுயிர் மதிப்பிற்காக அதில் முதலீடு செய்யவும் வேண்டும் என்றார். தமது தொகுதிக்கு உட்பட்ட டோவர், கிளெமென்டி காடுகள், ரயில் பசுமைப் பாதை அனைத்தும் குடியிருப்பாளர்களுக்கு ‘சிறந்த பல்லுயிர் மதிப்பை’ உருவாக்கியுள்ளதாக, குறிப்பாக கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் என்று அவர் குறிப்பிட்டார்.
கார்பன் வரிசிங்கப்பூரின் கார்பன் வரியை படிப்படியாக உயர்த்த பரிந்துரைத்தார் எம்பி டான் வீ (சுவா சூ காங் குழுத்தொகுதி). 2030ஆம் ஆண்டு வாக்கில் $30க்கும் $35க்கும் இடையிலும் 2035ஆம் ஆண்டு வாக்கில் $50க்கும் $90க்கும் இடையிலும் 2040ம் ஆம் ஆண்டு $75க்கும் 120க்கும் இடையிலும் வரியை உயர்த்துவது அவரது பரிந்துரை.