நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (என்டியு) சேர்ந்த ஆய்வாளர்கள், தோலின் முப்பரிமாண படங்களை ஒரு சில நிமிடங்களிலேயே உருவாக்கும் கையடக்க சாதனம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். தோல் பிரச்சினை, காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோலின் அளவு, நீளம், அகலம் ஆகியவற்றை இந்த முப்பரிமாண முறை அளவிடுகிறது. 'எக்ஸிமா' போன்ற குறிப்பிட்ட சில தோல் பிரச்சினைகளின் தீவிரத்தை மதிப்பிட இந்த முறை உதவும் என்று தேசிய தோல் நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் இயூ யிக் வெங் தெரிவித்தார்.
மேலும், புண் ஆறுவதைக் கண்காணிக்கவும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்யும்போது விரல் ரேகையை அடையாளம் காணவும் இந்த முப்பரிமாண முறை உதவும் எனக் கூறப்படுகிறது.
தோலின் இரு பரிமாண படங்களை வழங்கும் நடைமுறையைத் தற்போது மருத்துவர்கள் சார்ந்திருப்பதாக டாக்டர் இயூ சொன்னார். எனினும், போதிய ஒளிவெளிச்சம் இல்லாத காரணத்தால் இந்தப் படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்காது.
தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அதிக நேரம் எடுப்பதாகவும் சில வேளைகளில் அதற்கு அதிகம் செலவாவதாகவும் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள திரு ஃபூ ஸியாவ்சு குறிப்பிட்டார்.
"தோல் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உதவ, தோலின் முப்பரிமாணப் படங்களை உருவாக்குவதற்கு துரிதமாக செயல்படும் கையடக்க சாதனம் தேவைப்படுகிறது," என்று அவர் சொன்னார்.
மின்கலத்தால் இயக்கப்படும் இச்சாதனத்தின் எடை 100 கிராம், விலை $30. பத்தே நிமிடங்களின் தோலின் முப்பரிமாணப் படங்களை இது எடுக்கிறது.
இச்சாதனம் மறுபயன்பாட்டிற்கு உகந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

