ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் கடைசி நபர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி 31 வயது சத்தீஷ் நோயல் கோபிதாசை கொலை செய்ததாக ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் டான் ஹோங் ஷெங்கும் ஒருவர்.
அவர்களில் 29 வயது டான் சென் யாங் மட்டுமே கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். இவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் கவனிக்கவிருக்கிறது. எஞ்சிய ஆறு பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டு ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சத்தீஷ் கொல்லப்பட்ட நாளன்று கத்தியை வைத்திருந்த டான் சென் யாங்குடன் இருந்ததை ஒப்புக்கொள்ள டான் ஹோங் ஷெங் முன் வந்துள்ளார்.
அவர், இன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டான் ஹோங் ஷெங்கின் வழக்கறிஞர்கள், தனது கட்சிக்காரர் தாக்குதலில் பங்கேற்கவில்லை, தடுக்கவே முயற்சி செய்தார் என வாதிட்டனர்.
கலவரத்தில் ஈடுபட்ட இரு வேறு குற்றச்சாட்டுகளையும் டான் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மார்ச் 5ஆம் தேதி டானுக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.