கொவிட்-19 வேலையிட பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 140 நிறுவனங்கள் தங்களது வேலையிட செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 280க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு நடைமுறைகள் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து 36,000க்கும் அதிகமான வேலையிடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
"ஊழியர்கள் தங்களது வேலையை வீட்டிலிருந்து செய்ய முடியும் என்றபோதிலும் கூடுதலான ஊழியர்கள் நீண்ட நாட்களாக வேலையிடங்களில் பணியாற்றினர். இந்தப் பாதுகாப்பு நடைமுறைதான் அதிகம் மீறப்பட்டது," என்று அமைச்சு கூறியது.
சில நிறுவனங்கள் வேலை இடங்களிலும் சந்திப்பு அறைகளிலும் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளைச் செயல்படுத்த தவறின. எடுத்துக்காட்டாக, நாற்காலிகள் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வைக்கப்படவில்லை.
மனிதவள அமைச்சால் அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த விதிமுறைகளை முதன்முறையாக மீறியதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். குறைபாடுகளைச் சரிசெய்த பிறகு அந்நிறுவனங்கள் மீண்டும் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கலாம்.
சீனப் புத்தாண்டு நெருங்கும் வேளையில், சமூக ஒன்றுகூடல்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டாம் என நிறுவனங்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. மாறாக, மெய்நிகர் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தோ ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகளை அனுப்பி வைத்தோ நிறுவனங்கள் அவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தலாம் என்று அமைச்சு கூறியது.
"கடந்த மாதம் வேலையிடங்களில் இரு கொவிட்-19 குழுமங்கள் அடையாளம் காணப்பட்டன. சமூக அளவில் நோய்த்தொற்று பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருவதாலும் வேகமாகப் பரவக்கூடிய புதுவகை கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் வேலையிடங்களில் நோய்த்தொற்று அபாயம் நிலவுகிறது," என்று அமைச்சு விவரித்தது.
பாதுகாப்பு நடைமுறைகளை முதன்முறையாக மீறுவோருக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வேலையிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் அமைச்சு நினைவுபடுத்தியது.

