வடை வர்த்தகத்தில் சூர்யாவின் புத்தாக்கம்

இளையர்களை ஈர்க்கும் பிரபலமான மெல்லிய இசை ஒலிக்க, சுடச்சுட, கமகமக்கும் இறால் வடைக்கு பெரும்பாலும் நீண்ட வரிசை காத்திருக்கும். ஜூ சியாட்டிலுள்ள ‘த வடை ஷாப்’ தீவின் பல பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

“இறால் வடை சிங்கப்பூரின் ஸ்பெஷல். இதன் மூலம் மலேசியா அல்ல. இது இந்த நாட்டில் உருவான ஒரு சிறப்பு வடை,” என்றார் இரண்டாவது தலைமுறையாக வடை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 32 வயது திரு சூரியா செல்வராஜா. இவரது 64 வயது தாயார் யமுனா ராணி தொடங்கிய இந்தத் தொழிலுக்கும் இவர் வயது ஆகிறது.

மசால் வடை, உளுந்து வடை என்ற பாரம்பரியமான இந்திய வடையை கொஞ்சம் மாற்றி, இறால் வடை விற்கத் தொடங்கிய முன்னோடிகளில் இவரது தாயாரும் ஒருவர். தொடக்கத்தில் ஃபேரர் பார்க்கில் பிரபலமாக விற்கப்பட்ட இறால் வடையை இந்தியர்கள் அல்லாதோருக்கு ஏற்றதாக மாற்றினார் இவரது தாயார். இடையில் பல வேலைகளில் ஈடுபட்ட இவர், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தத் தொழிலில் முழுநேரமாக இறங்க முடிவுசெய்தார். அப்போதிலிருந்து வியாபாரத்தை மேம்படுத்த பல வழிகளை ஆராய்ந்து வருகிறார். ‘சீஸ்’ வடை உள்ளிட்ட வெவ்வேறு விதமான சுவைகளில் வடைகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்

இடையில் புரோட்டா, சோறு போன்றவற்றை விற்க முயன்று, அது தோல்வி அடைந்து கிட்டத்தட்ட $300,000 வரை திரு சூரியாவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ஹேக் ரோடு உணவுக்கடையிலுள்ள நண்பரின் பிரியாணி கடையில் சிறிது காலம் வடை விற்றபோது பிரபல உணவு விமர்சகரான கே.எப் சீத்தோ இவரது வடையைச் சுவைத்தார். பின்னர் தமது தளத்தில் இவரது கடையை அறிமுகம் செய்தார். அதன் பிறகு அவரது வடையைப் பற்றி மேலும் அதிகமானோர் தெரிந்துகொண்டனர்.

சிறு வயதில் எண் 32, ஜூ சியாட் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் தாயாருடன் இறால் வடையை விற்ற திரு சூரியா, தற்போது அதே இடத்தில் பெரிய வடைக் கடையைத் திறந்துள்ளார்.
கொவிட்-19 நோய்த்தொற்று முறியடிப்பு முடக்கநிலை, முதலாம் கட்டத் தளர்வு காலகட்டங்களின்போது ஜூ சியாட் பகுதியில் நோன்புப் பெருநாள் சந்தை நிறுத்தப்பட்டது. எனினும், அதன் பிறகு அவரால் குறைந்த வாடகைக்கு கடையைப் பெற முடிந்தது. கிருமிப்பரவலால் வேலையிழந்தோரின் உதவியுடன் வடை விநியோகச் சேவையையும் மேம்படுத்தினார்.

கிருமிப்பரவலால் ஒரு விதத்தில் நன்மை அடைந்ததாகக் கூறும் திரு சூரியா, இவ்வாண்டு தமது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த முடியும் என நம்புகிறார். இளம் வயதில் தாயாருடன் வடை விற்றதற்காக ஏளனம் செய்யப்பட்ட திரு சூரியா, இப்போது அதுவே அவருக்குப் பெருமையைத் தேடித் தருவதை எண்ணி அகமகிழ்வதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!