சிங்கப்பூரில் ஏழு முதல் ஒன்பது வயதுள்ள சிறார்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அன்றாடம் கைபேசி பயன்படுத்துகிறார்கள். சமூக ஊடகத்தில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களில் 40 விழுக்காட்டினருக்கும் அதிகமான சிறார்களுக்கு ஃபேஸ்புக்கில் சொந்த கணக்கு இருக்கிறது. கால்வாசிப்பேர் இன்ஸ்டகிராமில் இருக்கிறார்கள்.
இது கவலை தரும் நிலவரமாக இருக்கிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆணை பிறப்பித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்துகொண்ட பெற்றோரில் மூன்றில் ஒரு பங்கினர் சமூக ஊடகங்களில் யாருடன் தங்கள் பிள்ளைகள் தொடர்புகொள்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். அந்த ஆய்வை 'மிலியு இன்சைட்' என்ற இணையச் சந்தை ஆய்வு நிறுவனம் ஜனவரி மாதம் நான்கு நாட்கள் நடத்தியது. ஏழு முதல் 16 வரை வயதுள்ள பிள்ளைகளைக் கொண்ட 622 பெற்றோர் அதில் கருத்து தெரிவித்தனர்.
ஏழு முதல் 12 வயது வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்கள் பொதுவாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. இவற்றில் கணக்குத் தொடங்க வேண்டுமானால் குறைந்தபட்ச வயது 13 ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு தேவையும் உள்ளது.
சில சிறார்கள் சமூக ஊடகத்தில் தங்கள் வயதைப் பொய்யாக திருத்தி கூறுவது மிகவும் பொதுவானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறார்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் ஏழு முதல் ஒன்பது வயது ஆனபோதே சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். சமூக ஊடகத்தில் புழங்கும் மூன்று, அதற்கும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளின் அளவு 9 விழுக்காடாக இருப்பது வியப்பளிக்கிறது.
13 முதல் 16 வயது வரையிலான சிறார்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் நாள்தோறும் சமூக ஊடகத்தில் 4 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது தங்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது என்று 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படி பிள்ளைகள் இருப்பதால் சமூகத்தில் பலரோடும் கலந்து பழகுவதற்கான ஆற்றலை அவர்கள் இழந்துவிடுகிறார்கள் என்று பெற்றோர்களில் பாதி பேர் கவலைப் படுகிறார்கள். இணையத்தில் முன்பின் தெரியாதவர்கள் தங்கள் பிள்ளைகளை மிரட்டிவிட்டார்கள் என்று 7 விழுக்காட்டினர் கூறுகிறார்கள்.
சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தங்கள் பிள்ளைகளுக்கு வரம்புகளை விதித்தால் மற்ற பிள்ளைகளைவிட தங்கள் பிள்ளைகள் பின்தங்கிவிடுவார்கள் என்று பெற்றோரில் 10ல் நான்கு பேர் கவலைப்படுகிறார்கள். அப்படிச் செய்தால் தங்கள் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடுமோ என்று ஏறக்குறைய அதே அளவுக்கான பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளையிடம் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதால் அவர்களின் சமூக ஊடகப் புழக்கத்தைக் கண்காணிப்பதில்லை. ஏறக்குறைய பாதி பேர் பிள்ளைகளின் தனி உரிமையை மீறி செயல்பட தாங்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.
சமூக ஊடகமும் அதில் சிறார்கள் செலவழிக்கும் நேரம் இந்த மின்னிலக்கயுகத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பதற்றம் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணமாக உருவெடுத்து இருக்கிறது என்று கவனிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

