சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளைக் கடந்த ஆண்டு 42 மில்லியனுக்கு மேற்பட்ட பயணிகள் கடந்து சென்றனர். இது 2019ம் ஆண்டு விகிதத்தைக் காட்டிலும் 80% சரிவு.
மேலும் மதிப்பு குறைந்த பொருட் களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 21 மில்லியனைத் தொட்டது என்றும் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
2020ல் சிங்கப்பூருக்கு வந்த மற்றும் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 80.6% சரிவு கண்டது. ஒப்புநோக்க, 2019ல் அந்த எண்ணிக்கை 217 மில்லியன். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆகக் குறைந்த எண்ணிக்கை என்றும் ஆணையம் நேற்று வெளியிட்ட தனது வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டது.
ஆகாயப் போக்குவரத்துக்கான தேவை நிலைகுத்தியதால், பயணி களின் வருகை சரிந்தது. கொவிட்-19 கொள்ளைநோய் கார ணமாக பல நாடுகள் தங்கள் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.
பலர் வீட்டிலிருந்தவாறு, இணையம் வழி பொருட்களை வாங்கியதால், $400க்கும் குறைந்த மதிப்பிலான பொருட்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. 2019ல் இந்த வகை பொருட்களின் இறக்குமதி $10.5 மில்லியனாக இருந்தது. ஆனால் இது கடந்த ஆண்டு இரட்டிப்பாகி $21 மில்லியன் ஆனது.
இதற்கிடையே, சரக்குகள், கொள்கலன்கள், பொட்டலங்கள் என சிங்கப்பூருக்குள் வரும் பொருட்கள் 400,000ஐத் தொட்டது. 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 3.6% அதிகம்.
சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் மற்றும் வாகனங்களின் விகிதம் 55.4% சரிந்ததால், கள்ள சிகரெட்டுகளின் எண்ணிக்கையும் குறைந்தது. 2020ல் மொத்தம் 41,000 கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. 2019ல் அந்த எண்ணிக்கை 92,000.
இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்குள் மறைத்து சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாகக் கொண்டு வரப்படும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று ஆணையம் கூறியது. இதன் தொடர்பான சம்பவங்கள் ஐந்து மடங்கு அதிகரித்தது. 2019ல் 610 ஆக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 4,000க்கு உயர்ந்தது.
உத்தரவை மீறிய 22 பேர் மீது குற்றச்சாட்டு
வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தும் ஆணை ஆகியவற்றை மீறியதற்காக 22 பேர் மீது கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது என்று கூறிய ஆணையம் 2020ல் 280,000 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கிருமித்தொற்று கடந்த ஆண்டு ஏப்ரலில் உச்சத்தைத் தொட்டபோது, 40,000 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்றும் ஆணையம் தனது அறிக்கையில் விவரித்தது.