சீனப் புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் சிங்கப்பூரெங்கும் உள்ள ஈரச்சந்தைகளுக்குச் செல்ல வாடிக்கையாளர் கூட்டம் நீண்ட வரிசைகளில் காத்துக்கொண்டிருந்தது.
நிலைமையை ஆராய கோவன், சோங் பாங், பொத்தோங் பாசிர் ஆகிய வட்டாரங்களில் உள்ள ஈரச்சந்தைகளுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றனர்.
ஈரச்சந்தைக்குள் நுழைய இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாக அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
சில வரிசைகளில் பாதுகாப்பு தூர இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 10 மணி அளவில் கோவன் ஈரச்
சந்தைக்கு வெளியே 250 பேர் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.
அந்த வரிசை ஈரச்சந்தையிலிருந்து ஏறத்தாழ மூன்று நிமிட நடை தூரத்தில் இருந்த கோவன் எம்ஆர்டி நிலையம் வரை இருந்தது.
ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்துக்கொண்டிருந்ததாக அங்கிருந்த வாடிக்கையாளர்கள் கூறினர்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கு வரிசையில் காத்துக்கொண்டிருந்த 60 வயது திருவாட்டி எஸ். கோ, கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூரில் இப்படிப்பட்ட நீண்ட வரிசையைப் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் ஈரச்சந்தைக்குள் இருந்த மக்கள் கூட்டத்தை செவ்வனே நிர்வகிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறினர்.
அல்ஜுனிட் நகர மன்றத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உதவினார். ஈரச்சந்தைக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 120 பேர் மட்டுமே அனு
மதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.