இவ்வாண்டு மே மாதத்திலிருந்து என்டியுசி பாலர் பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் $400 நிரப்பப்படும்.
இந்த 4,000 குடும்பங்களின் ஓர் உறுப்பினருக்கு இலவச என்டியுசி உறுப்பியம் வழங்கப்படும் என்று என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் நேற்று தெரிவித்தது.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆதரவு அளிக்கவும் சீனப் புத்தாண்டில் அவர்களை மகிழ்விக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளில் இந்தத் திட்டங்களும் அடங்கும் என்று ஃபர்ஸ்ட் ஸ்கூல், லிட்டில் ஸ்கூல்-ஹவுஸ் ஆகிய பாலர் பள்ளி களை நடத்தி வரும் என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் தெரிவித்தது.
$4,500 அல்லது அதற்கும் குறைவான மொத்த மாதாந்திர குடும்ப வருமானம் பெறும் குடும்பங்கள் அல்லது $1,125 அல்லது அதற்கும் குறைவான தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாது, இம்மாதம் 31ஆம் தேதிக்குள் என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் நடத்தும் பாலர் பள்ளிகளில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
குறைந்தது மூன்று மாதங்களுக்கு அவர்கள் அப்பாலர் பள்ளிகளில் பயின்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு அந்த நிதியுதவி வழங்கப்படும். குழந்தை போனஸ் திட்டத்தின்கீழ் தகுதி பெறும் குடும்பங்களுக்கு என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் வழங்கும் $400க்கு நிகராக அரசாங்கம் நிதியுதவி வழங்கும். பாலர் பள்ளிக் கட்டணங்கள், சுகாதாரப் பராமரிப்பு, பல்மருத்துவம், மூக்குக்கண்ணாடி, குழந்தை போனஸ் திட்டத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையங்களில் குறிப்பிட்ட சில சிகிச்சைத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்படும் செலவை சமாளிக்க இந்த வழங்கீடு உதவும் என்று என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் கூறியது.
குழந்தை மேம்பாட்டுக் கணக்கை இன்னும் திறக்காத வசதி குறைந்த குடும்பங்கள் இந்த வழங்கீட்டைப் பெற அக்கணக்கைத் திறப்பர் என என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் நம்புகிறது.
குழந்தை மேம்பாட்டுக் கணக்கு வழங்கும் முதல் மானியத்தின்கீழ் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதியன்றும் அதற்குப் பிறகும் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே தலா $3,000 வரை வழங்கப்படும்.
இலவச என்டியுசி உறுப்பியத்தைப் பொறுத்தவரை, என்டியுசி வழங்கும் நிதி, வேலை வாய்ப்பு அனுகூலங்களை குடும்பங்கள் பெறுவர் என்று என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் தெரிவித்தது.
என்டியுசி-யு கேர் நிதியின்கீழ் வழங்கப்படும் மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகள், தொழிற்சங்கப் பயிற்சி ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கழிவுக் கட்டணத்துடனான திறன் மேம்பாட்டுப் பயற்சிகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
தகுதி பெறும் குடும்பங்கள் ஏற்கெனவே என்டியுசி உறுப்பியத்தைக் கொண்டிருந்தால் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் உறுப்பியத்துக்கான கட்டணத்தை என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் ஏற்கும்.
குடும்பத்தின் ஆக இளைய பிள்ளை என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸ் நடத்தும் பாலர் பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்குச் செல்லும் வரை உறுப்பியத்துக்கான கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை. நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு திட்டங்களுக்கும் $2 மில்லியன் நிதி ஒதுக்கப்படும் என்று அதை என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பசின் பிரைட் ஹொரைசன் நிதி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தரமான பாலர் கல்வியைப் பெற இந்த நிதி 2008ல் தொடங்கிவைக்கப்பட்டது.
"சிங்கப்பூரர்களுக்கு உறுதுணையாக என்டியுசி எப்பொழுதும் இருக்கும். குறிப்பாக, நெருக்கடிநிலைகளின்போது சிங்கப்பூரர்
களுக்கு அது ஆதரவாக இருக்கும். இந்தச் சவால்மிக்க காலகட்டத்தில் என்டியுசி உறுப்பியம் வழங்கும் அனுகூலங்களைக் கூடுதல் சிங்கப்பூர் குடும்பங்கள் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்று என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்தார்.

