தனியார் அவசர மருத்துவ வாகன நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சுகாதார அமைச்சு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
பொது மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளைத் தான் பிரதிநிதிப்பதாக அந்நிறுவனம் இணையத்தில் விளம்பரம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
அதாவது, அந்த தனியார் அவசர மருத்துவ வாகன நிறுவனத்தின் சேவைகளை அந்த மருத்துவமனைகள் பயன்படுத்துவதாக இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாங்கி பொது மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை, ராஃபிள்ஸ் மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை ஆகியன அந்தச் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள்.
"மேற்கூறப்பட்ட இந்த மருத்துவமனைப் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் இந்தத் தனியார் அவசர மருத்துவ வாகனச் சேவையைப் பயன்படுத்தவோ அதற்கு ஒப்புதல் அளிக்கவோ இல்லை என்பதால், இதுகுறித்து காவல்துறையிடம் சுகாதார அமைச்சு புகார் அளித்துள்ளது," என்று அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகச் சொன்ன அமைச்சு, சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் செய்வது பற்றி தான் பரிசீலிக்கப் போவதாக தெரிவித்தது.

