வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை, 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 3.04 மில்லியனுக்குக் குறைந்துள்ளது. வீவக வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனாலும் அவற்றில் குடியிருப்போரின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் வீவகவின் ‘மாதிரி குடும்பநிலை ஆய்வு’ மூலம் மொத்தம் 3.04 மில்லியன் சிங்கப்பூர்வாசிகள், அதாவது பத்தில் எண்மர் 2018ல் வீவக வீடுகளில் வசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 2013ல் இந்த எண்ணிக்கை 3.06 மில்லியனாக இருந்தது.
ஒவ்வொரு வீட்டுக்கும் உரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை சராசரியாக 3.4லிருந்து 3.1ஆகக் குறைந்துள்ளதே அண்மைய ஆய்வு முடிவுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், வீவக வீடுகளில் வசிப்போரில் மேலும் பலர் தனியார் வீடுகளுக்கு மாறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுமார் 7,800 வீடுகளை 2018ஆம் ஆண்டில் ஆராய்ந்த வீவக அறிக்கை, பொது வீடமைப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாண்டது. இவை குடியிருப்பாளர்களின் சொந்த எதிர்கால வீடமைப்புத் திட்டங்கள் முதல் குடும்ப உறவுகள், குடும்பத்தாரின் வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தன.
தனியாக வசிப்போரின் எண்ணிக்கை 2013ல் இருந்த 8.4 விழுக்காட்டிலிருந்து 2018ல் 11.9 விழுக்காடாக அதிகரித்திருந்தது. தகுதிபெறும் ஒற்றையர்கள் ஈரறை பிடிஓ வீடுகளை 2013ஆம் ஆண்டு முதல் முதிர்ச்சியடையாத வட்டாரங்களில் வாங்கலாம் என்று வீவக அனுமதித்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு ஒற்றையர் வசிக்கும் வீடுகளில் 47.5 விழுக்காட்டினர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 45.5 விழுக்காட்டினர் ஒற்றையர்கள்.
அத்துடன் ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக அறிக்கை தெரிவித்தது.
இருப்பினும், தங்களின் பெற்றோர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளம் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குடும்பப் பிணைப்பு, பராமரிப்பு, ஆதரவு போன்றவற்றை அருகில் வசிப்பதால் காண முடிவதாக ஆய்வுக் கண்டுபிடிப்புகள் கூறுவதை வீவக பேச்சாளர் சுட்டினார்.
ஒரே வசிப்பிடத்தில் முதுமைக்காலத்தைத் தழுவ விருப்பம்வீவக வீடுகளில் வசிப்போரில் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆறில் ஒருவருக்கு 65 அல்லது அதற்கு மேலான வயது. 2013ல் 13 பேரில் ஒருவர் மட்டுமே இப்பிரிவில் இருந்தனர். ஆய்வில் பங்கேற்ற மூத்தோரில் 86 விழுக்காட்டினர், தாங்கள் தற்போது இருக்கும் வீட்டிலேயே தொடர்ந்து இருக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். 2013ஆம் ஆண்டில் இது 80 விழுக்காடாக இருந்தது. பரிச்சயமான இடம், வீட்டுடன் ஏற்பட்டுள்ள ஒரு பிணைப்பு ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டன.
தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்கு உதவி தேவைப்பட்டாலும், சொந்த வீடுகளில் இருக்கவே பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர்.
குடும்ப உறுப்பினர்கள், இல்லப் பணிப்பெண்கள் ஆகியோர் தங்களின் பராமரிப்புத் தேவைகளை ஆதரித்த வண்ணம், இவ்வாறு தொடர்ந்து தங்களின் சொந்த வீடுகளில் வசிக்க விரும்புவதாக ஐந்தில் மூவர் கூறினர்.
சிறிய வீவக வீடுகளில் வசிப்போருக்கே பெரிய இலக்குஐந்தறை வீடுகள், எக்சிகியூட்டிவ் வீடுகள் ஆகியவற்றில் வசிப்போரைக் காட்டிலும் சிறிய வீவக வீடுகளில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகளுக்குத் தங்களின் வீடமைப்புத் திட்டத்தைப் பொறுத்தவரை கூடுதல் இலக்குகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரிய வீடு, தனியார் வீடு, வாடகை வீட்டுக்குப் பதிலாகச் சொந்த வீடு போன்ற குறிக்கோள்களை ஓரறை, ஈரறை போன்ற சிறிய வீவக வீட்டுவாசிகள் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆய்வில் பங்கேற்ற குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடு மாறத் திட்டம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். மாற விரும்பியவர்களில் இளம்பிள்ளைகள் உள்ள குடும்பங்களும் அடங்கின.