சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் பல ஆண்டுகாலம் பலரும் பாராட்டத்தக்க வகையில் புதிய வரவுசெலவுத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வந்துள்ளார்,
துணைப் பிரதமருமான அவர், சென்ற ஆண்டு தாக்கல் செய்த திட்டம், கொவிட்-19 பாதிப்பில் இருந்து சிங்கப்பூர் விரைவாக மீண்டுவர கை கொடுத்து உதவி வந்துள்ளது, வருகிறது.
படுமோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பொருளியல் இப்போது மீட்சிப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. ஆனால் கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள், நாடு எதிர்கொண்டு தீர்வு காணவேண்டிய பல்வேறு சவால்களாக இன்னமும் நீடிக்கத்தான் செய்கின்றன.
வருமான இழப்பு காரணமாக மக்களிடையே பொருளியல் ரீதியாக ஏற்றத்தாழ்வு அதிகரித்து உள்ளது; வேலை சந்தை நிச்சயமில்லாத நிலையில் இருந்து வருகிறது; கொவிட்-19க்குப் பிந்தைய உலகிற்குப் பொருத்தமான, உகந்த பொருளியல் உருமாற்றத்தை வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
அண்மைய பல ஆண்டுகாலமாக பற்பல திட்டங்கள் மூலம் ஏற்பட்ட பொருளியல் வளர்ச்சியின் வழிக வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வந்தது.
திரு ஹெங் சென்ற ஆண்டில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டமும் வருமான இடைவெளியைக் குறைக்க உதவியது. அவற்றால் பல பலன்கள் ஏற்பட்டு வந்தன. ஆனால் அந்த நற்பலன்களில் சிலவற்றை கொரோனா கெடுத்துவிட்டது.
கணக்கிட்டுப் பார்க்கையில், சென்ற ஆண்டில் குடும்பங்களின் ஒட்டுமொத்த சராசரி வருவாய் 2.4% குறைந்துவிட்டது. வருவாய் அளவில் கீழ்நிலையில் இருக்கும் 20 விழுக்காட்டினர்தான் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகக் கீழ்த்தட்டில் இருப்போருக்கு 6.1% அளவுக்கு வருவாய்க் குறைவு ஏற்பட்டுவிட்டது. வருவாய் இழப்பை நடுத்தர வர்க்கத்தினரும் அதிக வருவாய்ப் பிரிவினரும்கூட அனுபவித்து வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாம் புள்ளிவிவரத்துறை சில நாட்களுக்கு முன் வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரியவருகின்றன. பொருளியல் மந்தத்தில் சிக்கியதால் ஊழியர்கள் கிடைக்கும் வேலையைப் பிடித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சம்பளம் குறைவாகக் கிடைக்கும் வேலைகள், நிரந்தரமில்லாத வேலைகள், தங்கள் தகுதிக்குக் குறைந்த வேலைகள், குறைந்த நேர வேலைகள், சம்பளக் குறைப்பு எல்லாவற்றுக்கும் ஊழியர்கள் மாறிக்கொள்ள வேண்டி இருந்தது. வருவாயில் குறைவு ஏற்பட்டதற்கு இவையும் காரணங்கள்.
எது எப்படி இருந்தாலும் சென்ற ஆண்டின் பிற்பாதியில் பொருளியல் மீட்சிப் பாதைக்குத் திரும்பியது என்றாலும் வேலை சந்தை இன்னமும் நிச்சயமில்லாத நிலையில்தான் இருந்து வருகிறது என்றே தோன்றுகிறது.
சிங்கப்பூர் வாசிகளை எடுத்துக்கொண்டால், வேலையில்லா விகிதம் சென்ற ஆண்டு ஆகஸ்டில் 4.5% ஆக இருந்தது. அது கடந்த டிசம்பரில் 3.2%ஆகக் குறைந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருந்தாலும் அந்தப் புள்ளிவிவரங்கள், தங்கள் தகுதியைவிட குறைந்த வேலைகளில் பலரும் சேர்ந்ததையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது என்று பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அரசாங்கத்தின பல்வேறு திட்டங்கள் மூலம் கிடைத்துவந்த ஆதரவு, உதவிகள் இந்த ஆண்டில் அந்த திட்டங்கள் காலாவதி ஆகும்போது இல்லாமல் போய்விடக்கூடிய சூழலில் ஆட்குறைப்புகள், வருமான இழப்புகள் அதிகமாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்களில் நொடித்துப் போகக்கூடிய வாய்ப்புள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க இடமிருக்கிறது.
ஆகைல் வேலை கிடைக்காமல் இருப்போருக்கு வேலை நியமன திட்டங்கள் வழிக அரசாங்க ஆதரவு தொடர்ந்து இருந்து வரவேண்டிய தேவை இருக்கும். மக்களின் தேர்ச்சிகளை, திறன்களை தொடர்ந்து இடைவிடாமல் மேம்படுத்துவதே வருமான இடைவெளியைக் குறைக்க விவேகமான, உகந்த வழி என்பது திண்ணம். உற்பத்தித்திறனுக்கு ஏற்ப படிப்படிக உயரும் சம்பள ஏற்பாட்டை விரிவுபடுத்துவதும் இதில் விரும்பும் பலனைத் தரும்.
பொருளியல் மீட்சிப் பாதைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படும் போதிலும் குறிப்பாக விமானப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகள் இன்னமும் படுத்தே கிடக்கின்றன. அந்த துறைகள் மேலே எழுவதற்கு ஆண்டுகள் பலவாகும் போல் தெரிகிறது.
இத்தகைய ஒரு நிலையில், இந்தத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அரசாங்க ஆதரவுகள் தொடர வேண்டிய அவசியம் இருக்கும். கொவிட்-19 சென்ற ஆண்டில் தலை விரித்து ஆடியதால் பரந்த அளவிலான ஆதரவை அரசாங்கம் எல்லா துறைகளுக்கும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு நிலவரம் சென்ற ஆண்டைப் போல் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தேவைக்கு ஏற்ப தன் ஆதரவுத் திட்டங்களை, மானியங்களைத் திருத்தி அமைத்து அரசாங்கம் விவேகத்துடன் செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
சிங்கப்பூரின் பொருளியல் நிலவரங்கள், வரலாறு காணாத இத்தகைய சவால்களை எதிர்நோக்கி இருக்கின்ற சூழலில், நிதி அமைச்சர் திரு ஹெங், புதிய வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்கிறார்.
அந்தத் திட்டம் ஒரே காலத்தில் பல்வேறு சவால்களுக்கு இப்போதைக்கு மட்டுமின்றி வருங்காலத்துக்கும் எதிர்காலத்திற்கும் உரிய தீர்வுகளைக் காண வேண்டி இருக்கும். புதிய வரவுசெலவுத் திட்டம், பின்தங்கிவிட்டவர்களின் சுமைகளைக் குறைத்து அவர்களைக் கைதூக்கிவிட வேண்டும்.
அதே நேரத்தில், எந்த ஒரு சிரமமான காலத்தையும் சமாளித்து வேகமாக மீட்சி காணக்கூடிய மீள்திறன் கொண்ட பொருளியலை வலுப்படுத்த அது உதவ வேண்டும்.
கொவிட்-19க்குப் பிந்தைய காலத்திற்கு ஏற்ப உருமாறிக்கொண்டு தொடர்ந்து செழித்தோங்கும் பொருளியலை புதிய திட்டம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த இமாலய சவால்களை எல்லாம் சமாளிக்கும் ஆற்றலைக் கொண்ட புதிய வரவுசெலவுத் திட்டம் மன்றத்தில் தாக்கலாகும் என்பதே நாட்டின், வீட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- முரசொலி

