நிலப்போகுவரத்து ஆணையம் தனது ஆகக் கடைசி மின்னியல் சாலைக் கட் டண (இஆர்பி) மறு ஆய்வை முடித்துள்ளது.
இப்போது அதிகமானோர் தங்கள் வேலையிடங்களுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வீடு திரும்புவதற்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதால், பொதுவாக வார நாட்களின் உச்சநேரத்தில் போக்குவரத்தின் நெருக்கடி உயர்ந்துள்ளது.
அதன் காரணமாக ஆயர் ராஜா (ஏஒய்இ), மத்திய (சிடிஇ), காலாங் - பாய லேபார் (கேபிஇ) விரைவுச் சாலைகளின் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இம்மாதம் 22ஆம் தேதி முதல் இஆர்பி கட்டணம் $1 உயர்த்தப்படும்.
நகரை நோக்கிச் செல்லும் 'ஏஒய்இ' ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு, டெஃபு மேம் பாலச்சாலைக்குப் பிறகு 'இசிபி' நோக்கிச் செல்லும் 'கேபிஇ'யில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை கட்டணம் $1 ஆகும்.
கட்டணம் அதிகரிக்கப்படும் இதர விரைவுச்சாலைகளின் விவரங்கள் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
மற்ற விரைவுச்சாலைகளின் இஆர்பி கட்டணத்தில் மாற்றமில்லை .

