எம்ஆர்டி ரயில்களில் சட்டவிரோத பொதுக் கூட்டம் நடத்தியதன் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை மனித உரிமை ஆர்வலர் ஜோலோவன் வாம் ஒப்புக்கொண்டதை அடுத்து நேற்று அவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவத்தில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று, 1987ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் பாதுகாப்பு செயற்பாட்டின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கூடியது.
வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் சென்றுகொண்டிருந்த ரயில்களில் ஜூன் 3, 2017ல் சுமார் இரண்டு மணிநேரம் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கண்களைக் குப்பைப் பைகளால் கட்டியவாறு 1987ல் நடந்த செயற்பாடு தொடர்பான புத்தகம் ஒன்றைக் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அனுமதியின்றிப் பொது இடத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்குவது வாமுக்கு இது இரண்டாவது முறை. அத்துடன் போலிஸ் அறிக்கையிலும் வாம் கையெழுத்திட மறுத்ததாகக் கூறப்பட்டது.

