தோ பாயோவில் பாதசாரியை இடித்துத் தள்ளிய விபத்து: ஒரு பெண் உட்பட மூவர் கைது

2 mins read
8b6a1d23-8a55-4ece-a952-ecf5f380dd69
படம்: SCREENGRABS FROM SG ROAD VIGILANTE - SGRV/FACEBOOK -

தோ பாயோவில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) நிகழ்ந்த 'ஹிட் அண்ட் ரன்' விபத்தின் தொடர்பில் 27 மற்றும் 34 வயதுகளில் இருவர் கைது செய்யப்பட்டனர் என போலிசாரும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்தில் பயணம் செய்த 27 வயது ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பொது இடங்களில் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தவர்களுடன் சென்றது மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் ஆகிய சந்தேகங்களின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த வாகனத்தின் ஓட்டுநர் என நம்பப்படும் 34 வயது ஆடவர் நேற்று கைதானார். பொது இடங்களில் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தவர்களுடன் சென்றது மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், கடும் காயம் விளைவிக்கும் விதத்தில் அபாயகரமாக வாகனம் ஓட்டியது, பிற போக்குவரத்து தொடர்பான குற்றங்கள் ஆகிய சந்தேகங்களின் பேரில் அவர் கைதானார்.

அந்த வாகனத்தில் இருந்த மற்றொரு பயணியான 32 வயது மாது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்த சந்தேகத்தின்பேரில் விபத்து நடந்த இடத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை கைதானார்.

34 வயது ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கைதான மற்ற இருவரிடமும் விசாரணைகள் தொடர்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணியளவில் தீவு விரைவுச் சாலையில் சாங்கி விமான நிலையத்தை நோக்கிய பாதையில் வாகனம் ஒன்று வேகமாகச் சென்றதை போக்குவரத்து போலிஸ் அதிகாரிகள் கண்டனர். அந்த வாகனத்தை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் வாகனம் நிற்காமல் தோ பாயோ லோரோங் 2ஐ நோக்கி வேகமாகச் சென்றது.

தோ பாயோ லோரோங் 1ல் சாலையைக் கடந்த பாதசாரியான 25 வயது பெண் மீது அந்த கார் மோதியது. அதனையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது மோதி நின்றது.

உடனே, அந்தக் காரிலிருந்து இறங்கிய மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

குறிப்புச் சொற்கள்