கொவிட்-19 நெருக்கடி காரணமாக நிலையற்ற பொருளியல் சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் 2021 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்ட துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட், $900 மில்லியன் தொகை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தில் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதும் உள்ளடங்கும். இந்தப் பற்றுச்சீட்டுகள் நெருக்கடி காலத்தில் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான செலவுகளை ஈடுகட்டும். அத்துடன், உள்ளூர் வர்த்தகர்களுக்கும் ஆதரவாக இருக்கும். வீடுகளுக்கான சேவை மற்றும் பராமரிப்புக் கட்டணக் கழிவுகள், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டுகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
$100 பற்றுச்சீட்டு
ஏறக்குறைய 1.3 மில்லியன் குடும்பங்கள் $100 சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெறும். அந்தப் பற்றுச்சீட்டுகளை உள்ளூர்க் கடைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களில் செலவிடலாம். இதுகுறித்த மேல் விவரங்களைச் சமூக மேம்பாட்டு மன்றம் பின்னர் வெளியிடும். இந்த நிதிக்காக சமூக மேம்பாட்டு மன்றங்களுக்கு கூடுதல் நிதியாக $150 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.
குடும்பங்களுக்கு உதவும் இந்தத் திட்டம் சிங்கப்பூரர்களின் ஒற்றுமை உணர்வுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருந்தாலும் அது உள்ளூர் வர்த்தகங்களுக்கும் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் இருக்கும்.
கொரோனா தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் சிங்கப்பூரர்கள் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் கடைப்பிடித்தனர்.
தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளாலும் உள்ளூர் வர்த்தகர்களும் உணவங்காடிக் கடைக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றுவதில் அவர்களின் புரிந்துணர்வும் கட்டுப்பாடும் மிகவும் முக்கியமானவை என்று திரு ஹெங் கூறினார்.
சேவை மற்றும் பராமரிப்புக் கட்டணக் கழிவு
குடும்ப ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வீவக வீடுகளில் வசிக்கும் தகுதிபெறும் சிங்கப்பூர் குடும்பங்களுக்குச் சேவை மற்றும் பராமரிப்புக் கட்டணக்கழிவு வழங்கப்படும். இந்த ஆண்டு ஒன்றரை மாதம் முதல் மூன்றரை மாதங்கள் வரையிலான கட்டணக்கழிவு வழங்கப்படும் என்று திரு ஹெங் கூறினார்.
ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் இந்த ஆண்டின் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களிலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணக் கழிவுச் சலுகையைப் பெறுவர்.
சிறப்பு உதவித்தொகையாக $200 ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு
வழக்கமான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுடன், குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களில் ஏறக்குறைய 1.4 மில்லியன் பேர் கூடுதல் சிறப்பு உதவித்தொகையாக வரும் ஜூன் மாதத்தில் $200 ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளைப் பெறுவர்.
ஜிஎஸ்டி-யு-சேவ் சிறப்பு உதவித்தொகை மூலம் சுமார் 950,000 குடும்பங்கள் கூடுதல் உதவித் தொகையாக $120 முதல் $200 பயனீட்டுக் கட்டணக் கழிவைப் பெறும். இது ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்கும். இதன் மூலம் குடும்பங்கள் வழக்கமாகப் பெறும் ஆண்டுக் கழிவுக் கட்டணத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகம் பெறும்.
21 வயதுக்குக் குறைந்தோருக்கு $200
21 வயதுக்குக் குறைந்த சிங்கப்பூரர்களுக்கு குழந்தை மேம்பாட்டுக் கணக்கு, எடுசேவ் அல்லது உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்கில் $200 நிரப்பப்படும். அந்தத் தொகையை கல்வி சார்ந்த செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சுமார் 780,000 சிறார்கள் பயன்பெறுவர்.
கொவிட்-19 கொள்ளைநோய் அனைத்து சமூகங்களையும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. அத்துடன், அவர்கள் ஒரு சமூகமாகத் தங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள் என்பதுடன் ஒன்றுபட்ட மக்களாக அவர்களின் பண்புநெறிகளையும் எடுத்துக்காட்டுகிறது என்று இந்த வரவுசெலவுத் திட்ட உரையின் நிறைவில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் குறிப்பிட்டார்.
ஒருவருக்கொருவர் ஆதரவ ளிக்க சிங்கப்பூரர்கள் ஒன்று திரண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதும், எவ்வளவு சிரமமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் தனது பங்கைச் செய்து வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு, சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள பண்புநெறிகளை முக்கியமாக வெளிப்படுத்தியது. அத்துடன், தனிப்பட்ட செயல்களுக்கு அப்பால், ஒன்றுபட்ட சமூகமாக மக்கள் இதனை எதிர்கொண்டது பெருமைக்குரியது என்றார் திரு ஹெங். சிங்கப்பூரர்கள் தொடர்ந்து எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெளிவான திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் திரு ஹெங் கேட்டுக்கொண்டார்.
தொலைநோக்குச் சிந்தனை, பருவநிலை மாற்றம், எதிர்கால தொற்றுநோய்கள் போன்ற நீண்டகால சவால்களை எதிர்கொள்வதும் சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் பங்காளித்துவங்களைப் பெருக்கிக்கொள்வதும் முக்கியம் என்றார் திரு ஹெங்.

