பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வைத்திருப்போர் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதலான நடவடிக்கைகள் வெளியிடப்படவுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 டிசம்பர் வரை மின்சார வாகனங்களுக்கான குறைந்தபட்ச கூடுதல் பதிவுக் கட்டணம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தற்போது, கார் வாங்குவோர் கூடுதல் பதிவுக் கட்டணமாக குறைந்தது $5,000 செலுத்த வேண்டியுள்ளது. தாங்கள் வாங்கவிருக்கும் கார் பெறும் வரிக்கழிவு எதுவாக இருந்தாலும் இந்தக் கட்டணம் பொருந்துகிறது.
மின்சார கார்களை வாங்குவோருக்கு குறைந்தபட்ச கூடுதல் பதிவுக் கட்டணமாக குறைப்பதன் மூலம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான ஊக்கத்தொகை திட்டத்தில் இருந்து அவர்கள் வரிக் கழிவுகளை அதிகம் பெற முடியும்.
மின்சார கார்களுக்கான சாலை வரியும் மாற்றியமைக்கப்படும். அப்போது மின்சார கார்களுக்கான சாலை வரி பெட்ரோல், டீசல் கார்களுக்கான வரியுடன் ஒப்பிடும் அளவாக இருக்கும் என்றார் திரு ஹெங்.
வரவுசெலவுத் திட்டம் குறித்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதுகுறித்த மேல்விவரங்கள் அறிவிக்கப்படும்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030'இன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் வாகன வரிக்கட்டமைப்பைத் தான் மாற்றியமைக்கப்போவதாக அரசாங்கம் கூறியிருந்தது.
மின்சார வாகனங்களை வாங்கவும் அதை வைத்திருக்கவும் இந்த ஏற்பாடு உதவும்.
மின்சார வாகனங்கள் தொடர்பான திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $30 மில்லியன் ஒதுக்கப்படும் என்றார் திரு ஹெங்.
எடுத்துக்காட்டாக, தனியார் பேட்டைகளில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்ய கூடுதலான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
2030க்குள் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் இடங்களின் எண்ணிக்கை அரசாங்கம் 60,000ஆக உயர்த்தவிருக்கிறது. தற்போது அந்த எண்ணிக்கை 28,000ஆக உள்ளது.

