தேர்ச்சிகளோடு சம்பளமும் படிப்படியாக உயரும் ஏற்பாட்டை விரிவுபடுத்த என்டியுசி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் வெற்றி கிடைத்தால் குறிப்பிட்ட தொழில்துறைகளைச் சேர்ந்த நடுத்தர வருவாய் ஊழியர்களுக்கும் படிப்படியாக சம்பளம் உயரும் முறை நடப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பட்டா நிர்வாகம், சூரிய சக்தி தொழில்நுட்பம், பூச்சிக்கொல்லித் துறை போன்றவற்றின் முதலாளிகளுடன் இதன் தொடர்பில் என்டியுசி பேசி வருவதாக அதன் தலைமைச் செயலாளரான இங் சீ மெங் நேற்று தெரிவித்தார்.
படிப்படியாக உயரும் சம்பள முறை, பல்வேறு தேர்ச்சிநிலைகளிலும் ஊழியர்களுக்குப் பயிற்சித் தேவைகளையும் குறைந்தபட்ச சம்பளத்தையும் நிர்ணயிக்கிறது.
தொழில்துறைகளுக்குப் பதிலாக பல வேலைகளுக்கு சம்பளத்தையும் தேர்ச்சி நிலைகளையும் நிர்ணயித்து அதன்மூலம் இந்தச் சம்பள ஏற்பாட்டில் புதிய அணுகுமுறையைக் கைக்கொள்வதன் தொடர்பில் சாதாரண நிலையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
திரு இங், தொழிற்சங்க இயக்கத்தின் இந்த ஆண்டிற்கான முன்னுரிமைகள் பற்றி மெய்நிகர் ஊடகக் கூட்டத்தில் பேசினார்.
எழுத்தர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோரை இந்த வேலைகள் உள்ளடக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முத்தரப்புப் பங்காளிகள் சிலருடன் இப்போது சாதாரண நிலையில் விவாதிப்புகள் நடந்து வருவதாகவும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் கொஞ்சம் முன்னேற்றம் காணலாம் என்று தான் நம்புவதாகவும் திரு இங் தெரிவித்தார்.
படிப்படியாக உயரும் சம்பள முறை, பொருளியலின் ஒவ்வொரு துறையிலும் ஏதோ ஒரு வகையில் இடம்பெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் என்று நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து பேசியபோது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
அந்தச் சம்பள முறையை முதன்முதலாக 2012ல் என்டியுசி நடப்புக்குக்கொண்டு வந்தது.
இப்போது துப்புரவு, நில வடிவமைப்பு, பாதுகாவல் ஆகிய துறைகளில் அந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் ஏறக்குறைய 80,000 ஊழியர்கள் பலனடைகிறார்கள். மின்தூக்கி மற்றும் விசைப்படி பராமரிப்புத் துறையில் 2022ல் இந்த ஏற்பாடு கட்டாயமாக்கப்படும்.
படிப்படியாக உயரும் சம்பள முறையை உணவு சேவைகள், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் அமல்படுத்துவதற்கான பரிந்துரைகள் இந்த ஆண்டில் வெளியிடப்பட்டு இரண்டு முதல் மூன்றாண்டு காலத்துக்குள் நடப்புக்கு வரும் என்று தான் நம்புவதாகவும் திரு இங் குறிப்பிட்டார். இந்தத் துறைகளில் ஏறத்தாழ 70,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இதனிடையே, ஒப்பந்த ஊழியர்களை இன்னும் சிறப்பாக பிரதிநிதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்துவதற்கு என்டியுசி நெருக்கும் என்றும் திரு இங் தெரிவித்தார்.
இத்தகைய ஒப்பந்த ஊழியர்கள் கிட்டத்தட்ட 200,000 பேர் இருக்கிறார்கள் என்பதை என்டியுசியின் தலைமைச் செயலாளர் சுட்டினார்.
கொவிட்-19லிருந்து மீண்டு வர சிங்கப்பூர் அரும்பாடுபடும் இந்த ஆண்டில் தொழிற்சங்க அமைப்பின் முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

