சிங்கப்பூரில் $10,000 கள்ளநோட்டை மாற்ற சதித்திட்டம் தீட்டிய ஆடவருக்கு நான்காண்டுகள், 2 மாதங்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாத்தாமின் தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கும் ஜூசுஃப் நபாபன் எனும் 49 வயது ஆடவர் $10,000 நோட்டை வங்கியில் மாற்ற மற்றொருவரின் உதவியை நாடியதுடன், அவரிடமிருந்து பின்னர் $7,500 தொகையைப் பெற்றுக்கொண்டார்.
கள்ளநோட்டை நல்ல பணம் என்று கூறி மாற்ற சதித்திட்டம் தீட்டிய ஒரு குற்றச்சாட்டை நபாபன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரர் யாரிடமாவது $10,000 நோட்டைக் கொடுத்து சிறிய மதிப்பிலான நோட்டுகளாக மாற்ற, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நபாபன் மற்றொரு இந்தோனீசியரான யோலாண்டா என்பவரை அணுகினார்.
தம்முடன் உறவில் இருந்த 47 வயது யோலாண்டாவிடம், அவ்வாறு சிறிய மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றித் தரும் சிங்கப்பூரருக்கு தரகு வழங்குவதாகவும் நபாபன் குறிப்பிட்டிருந்தார்.
இதில் உதவ ஒப்புக்கொண்ட 62 வயது சா எங் கியட் என்பவரை யோலாண்டா தொடர்புகொண்டார்.
இவர்கள் மூவரும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சந்தித்தனர். அப்போது கள்ளப்பணத்தை சா இடம் கொடுத்தார் நபாபன்.
இவ்வளவு பெரிய மதிப்புடைய பணம் கள்ளப்பணமாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தை சா கொண்டிருந்தாலும் 2 கடைகளில் அந்த நோட்டை மாற்ற முயற்சி செய்தார் சா. ஆனால் கடைக்காரர்கள் வாங்கிக்கொள்ளவில்லை.
ஆயினும் தரகுக்கு ஆசைப்பட்டு நபாபனுக்கு உதவ எண்ணிய சா, வங்கியில் அந்த நோட்டை கொடுத்து மாற்ற முடிவு செய்தார்.
அதனையடுத்து அம்மூவரும் ஹார்பர் ஃபிரான்ட் நிலையத்துக்குச் சென்றனர். அங்குள்ள டிபிஎஸ் வங்கிக் கிளையில் அந்த நோட்டை காசாளரிடம் கொடுத்தார் சா.
காசாளர் அந்த நோட்டை வைத்த பணம் எண்ணும் இயந்திரம் கள்ளநோட்டுகளைக் கண்டுபிடிக்கும் திறன் பெற்றிருக்கவில்லை என்பதால், கள்ளப்பணத்தை பெற்றுக்கொண்டு, அதை சா என்பவரின் வங்கிக் கணக்கில் சேர்த்தார் காசாளர்.
பின்னர் அந்தப் பணத்தை மூவரும் பங்கிட்டுக்கொண்டனர். தரகுப் பணமாக சா $1,500 பெற்றார். நபாபனுக்கு $7,500, எஞ்சிய தொகை யோலாண்டாவுக்கு கிடைத்தது.
பின்னர் அந்தப் பணத்தை நபாபன் சூதாட்டத்தில் செலவிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வங்கி ஊழியர் போலிசில் புகார் செய்ததையடுத்து இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பவத்தில் ஈடுபட்டதற்காக கடந்த மார்ச் மாதத்தில் சா நான்காண்டு, 2 மாத சிறைத் தண்டனை பெற்றார்.
யோலாண்டாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
நபாபனின் குற்றத்துக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.