சிங்கப்பூரில் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற பட்டதாரிகளில் பெரும்பாலோருக்கு சென்ற ஆண்டு வேலை கிைடத்ததுடன் அவர்களின் சராசரி சம்பளமும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. அத்துடன், தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறைகளில் முழுநேர வேலை கிடைக்கப் பெற்றவர்கள் மற்றவர்களைவிட மிக உயர்ந்த சம்பளத்தைப் பெறும் நிலையும் ஏற்பட்டது.
ஆனால், கொள்ளைநோய்ச் சூழலால் சென்ற ஆண்டு பல பட்டதாரிகள் பகுதிநேர வேலைகள், அல்லது வேலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ஐந்தில் ஒரு பட்டதாரி பகுதிநேர வேலையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டில் $3,600ஆக இருந்த புதிய பட்ட தாரிகளின் சராசரி சம்பளம் சென்ற 2020ஆம் ஆண்டில் $3,700ஆக உயர்ந்தது. கொவிட்-19 சூழலில் நடத்தப்பட்ட முதல் வேலை தொடர்பான ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், இறுதி ஆண்டு தேர்வு எழுதி ஆறு மாதங்களிலேயே வேலை கிடைத்தோரின் விகிதம் 93.6 விழுக்காடாக இருந்தது. இதுவே, 2019ஆம் ஆண்டு 90.7 விழுக்காடாக இருந்ததாக ஆய்வு சுட்டுகிறது.
கணினி அறிவியல், இணையப் பாதுகாப்பு, மென்பொருள் பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தோர் சராசரி சம்பளத்தின் உச்சமாக $4,760 பெற்றனர் என்றும் இந்தத் துறைகளில் நிரந்தர முழுநேர வேலையில் அமர்த்தப்பட்டோரின் விகிதம் 87.3 விழுக்காடாக இருந்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. எனினும், ஆண்டு அடிப்படையில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நிரந்தர, முழுநேர வேலை கிடைத்த பட்டதாரிகளின் விகிதம் 69.8 விழுக்காட்டுக்கு வீழ்ச்சி கண்டதாக அது கூறியது.
இதுவே, 2019ஆம் ஆண்டில் 81.7 விழுக்காடாக இருந்ததாகவும் ஆய்வு சுட்டியது. இதேேபால், சென்ற ஆண்டு பகுதி நேர அல்லது தற்காலிக வேலைக்குச் சென்ற பட்டதாரிகளின் விகிதம் 22.3 விழுக்காடாக இருந்ததாகவும், ஒப்புநோக்க 2019ஆம் ஆண்டின் விகிதம் 7 விழுக்காடாக இருந்ததாகவும் ஆய்வு கோடிகாட்டுகிறது.
சென்ற ஆண்டில் பகுதிநேர வேலைக்குச் சென்ற பாதிப்பேர், அதாவது 11.3 விழுக்காட்டினர் தாங்களாகவே அவ்வாறு செய்ததாக ஆய்வு விளக்கியது. ஒப்புநோக்க, கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த விகிதம் 2.4 விழுக்காடாக இருந்ததாக ஆய்வு தெளிவுபடுத்தியது. மேலும், பகுதிநேர அல்லது பயிற்சித் திட்டங்களில் சேர்ந்த நான்கில் மூன்று பட்டதாரிகளுக்கு மேல் எஸ்ஜிஒற்றுமை பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

