பணம் கையாடல் செய்ததாக யுஓபி வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. லிங் ஷெக் லுன், 65, எனப்படும் அவர் 2.9 மில்லியன் பவுண்டு (S$5.4 மில்லியன்), 14,100 அமெரிக்க டாலர் (S$18,600) நிதியை 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பல முறை கையாடல் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
மேலும் சட்டவிரோதமாகப் பெற்ற 1.8 மில்லியன் பவுண்ட்டுக்கு மேற்பட்ட தொகையை யோங் ஐ கிம் என்பவருக்கு அனுப்பியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அந்த நபர் யார் என்ற விவரங்கள் அதில் இல்லை. இம்மாதம் 10ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட லிங், இரு மோசடிக் குற்றங்கள், 11 நம்பிக்கை மோசடிக் குற்றங்கள், 28 போலி ஆவண குற்றங்கள் உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

