தெருநாய்கள் துரத்தியதில் தடுமாறி வடிகாலுக்குள் விழுந்த சைக்கிளோட்டி

1 mins read
561c2844-6e09-46cf-bb41-a6641d038c79
படங்கள்: ஸ்டோம்ப் -

தெருநாய்கள் இரு சைக்கிளோட்டிகளைத் துரத்தியதில், சைக்கிளோட்டி ஒருவர் அவரது மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்தார், மற்றவர் சாலையோரத்தில் இடித்து வடிகாலுக்குள் விழுந்தார்.

கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 15) நள்ளிரவை நெருங்கும் வேளையில், ஷிப்யார்ட் ரோட்டில் இருவர் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சில தெருநாய்கள் காணப்பட்டன. அவற்றில் இரண்டு அந்த சைக்கிளோட்டிகளை நோக்கிச் சென்றன.

அவற்றைப் பார்த்த சைக்கிளோட்டிகள் இருவரும் சைக்கிள்களின் மீதான கட்டுப்பாட்டை இழந்தனர்.

அதனையடுத்து ஒருவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். மற்றவர் சாலையோரத்தில் இருந்த வடிகாலுக்குள் விழுந்தார். இந்தச் சம்பவத்தைக் காட்டும் புகைப்படமும், காணொளியும் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.

அந்தப் பகுதியிலிருந்து உதவி கோரி சென்ற செவ்வாய்க்கிழமை அதிகாலை 12 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஒருவர் வடிகாலுக்குள் விழுந்திருந்ததைக் கண்டனர்.

ஒரு தூக்குப் படுக்கையைப் பயன்படுத்தி, வடிகாலுக்குள் விழுந்தவரை மீட்டு, இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை.

குறிப்புச் சொற்கள்