தேங் ரோட்டில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக செட்டியார் கோயில் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையில் ஓர் இன்றியமையாத அங்கம் வகித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இக்கோயிலுக்கு பல இனத்த வரும் வந்து வழிபடுவதும் தொண்டூழியம் செய்வதும் வழக்கம்.
ஆண்டுதோறும் கல்வி நிதி உதவி, யோகா வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இயந்திர சக்கர நாற்காலி என பல வகைகளிலும் இக்கோயில் சமூகத்திற்கு அதனால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
முந்தைய வருடங்களில் சீனர்களைத் தங்களது கோயிலுக்கு அழைத்து விருந்தளித்து சீனப் புத்தாண்டை கொண்டாடி வந்தது இக்கோயில்.
இந்த ஆண்டு கொவிட்-19 சூழல் காரணமாக இக்காலகட்டத்திற்கு ஏற்ப, தனது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு ஜாலான் குக்கோ வட்டாரத்தில் உள்ள 200 முதியோர் மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று உணவுப் பொட்டலங்களையும் 'ஆங்பாவ்' ரொக்க அன்பளிப்பையும் கொடுத்து அவர்களின் முகங்களில் புன்சிரிப்பை கொண்டு வந்துள்ளது.
நேற்று காலை நடைபெற்ற இத்திட்டத்தில் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் மற்றும் ஜாலான் குக்கோ அடித்தள அமைப்புகளின் தொண்டூழியர்கள் என சுமார் 30 பேர் பங்கேற்றனர்.
இந்தத் தொண்டூழிய நடவடிக்கைகள் சிங்கப்பூரர்கள் இடையே இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் என்பதில் உறுதியாக உள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்.
இதேபோல் நோன்புப் பெருநாள், தீபாவளிப் பண்டிகைகளை முன்னிட்டு சிங்கப்பூரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய இக்கோயில் திண்ணமாக உள்ளது என்று கூறினார் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு சேக்கப்பன் சுவாமிநாதன்.

