மூத்த குடிமக்களிடையே மனம்போன போக்கில் சாலையைக் கடக்கும் பழக்கம்

மூத்த குடிமக்களிடையே மனம்போன போக்கில் சாலையைக் கடக்கும் பழக்கம்

3 mins read
808387d9-4888-4280-846f-757e9dc4df6b
கடந்த வாரம் திங்கட்கிழமை சர்க்கிட் ரோட்டில் கண்டபடி சாலையைக் கடந்த பாதசாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஆண்டு சாலை­யைக் கடந்­த­போது விபத்­து­களில் சிக்கி மூத்­தோர் 15 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­களில் பாதிப் பேர் மனம்­போன போக்­கில் சாலை­யைக் கடந்­த­போது விபத்து ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில், சாலைப் பாது­காப்பு குறித்து மூத்­தோ­ரின் மனப்­போக்­கைக் கண்­ட­றிய சர்க்கிட் ரோடு, சிராங்­கூன் அவென்யூ 3 ஆகிய இடங்­க­ளுக்கு சண்டே டைம்ஸ் செய்­திக்­குழு கடந்த திங்­கட்­கி­ழமை சென்­றது.

அன்று காலை 11 மணிக்­கும் பிற்­ப­கல் 12.30 மணிக்கு இடை­யில் புளோக் 79, 79A சர்க்கிட் ரோடு உணவு நிலை­யம் அல்­லது எதிரே உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளுக்­குச் செல்ல 20க்கும் அதி­க­மான மூத்­தோர் மனம்­போன போக்­கில் சாலை­யைக் கடந்­த­னர்.

பாத­சா­ரி­கள் கடப்­ப­தற்கு அரு­கில் சாலைப் போக்­கு­வ­ரத்து விளக்கு இருந்­தும் கண்­மூ­டித்­த­ன­மாக சாலை­யைக் கடக்­கக்­கூ­டாது என்ற அறி­விப்­புப் பலகை இருந்­தும் மூத்­தோர் பல­ரும் தங்­க­ளது வச­திக்­கேற்ப சாலை­யைக் கடந்­த­னர்.

சாலை­யோ­ர­மாக பல வாக­னங்­கள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன. இத­னால் பாத­சா­ரி­கள் சாலை­யைக் கடப்­பது எதிர்­வ­ரும் வாகன ஓட்­டு­நர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் போகும் அபா­யம் நில­வி­யது.

சர்க்கிட் ரோடு பகு­தி­யில் மூத்­தோர் மனம்­போன போக்­கில் சாலை­யைக் கடப்­பது வழக்­க­மான ஒன்­றா­கி­விட்­டது என்று திரு சியா, 79, எனும் குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

"சாலைப் போக்­கு­வ­ரத்து விளக்கு இருக்­கும் இடம் வரை நடந்­து­செல்­லவோ மின்­தூக்கி வசதி இல்­லாத மேம்­பா­லத்­தைக் கடக்­கவோ மூத்­தோர் சில­ருக்கு வலிமை இல்லை," என்று அவர் சொன்­னார்.

திரு பாங், 70 எனும் மற்­றொரு குடி­யி­ருப்­பா­ளர், எதிர்­வ­ரும் வாக­னங்­க­ளின் வேகத்தை மூத்­தோர் தவ­றாக மதிப்­பிட்­டு­வி­டு­வ­தால் மூத்­தோர் விபத்­து­களில் சிக்­கி­வி­டு­கின்­ற­னர் என்று கூறி­னார்.

அன்று மாலை 6 மணிக்­கும் இரவு 7 மணிக்­கும் இடை­யில் சிராங்­கூன் அவென்யூ 3ல் மூத்த குடி­மக்­கள் 60க்கும் அதி­க­மா­னோர் மனம்­போன போக்­கில் சாலை­யைக் கடந்­த­னர். அந்த இரு­வழி சாலை­யில் போக்­கு­வ­ரத்து பெரும்­பா­லும் அதி­க­மாக இருந்­தது.

ஐம்­பது மீட்­டர் தூரத்­தில் சாலைப் போக்­கு­வ­ரத்து விளக்­கு இருந்­த­போ­தி­லும் மூத்­தோர் பலர் மனம்­போன போக்­கில் சாலை­யைக் கடந்­த­னர்.

திரு மார்க் எனும் குடி­யி­ருப்­பாளர் ஒரு­வர், "வாக­னங்­கள் அதி­கம் செல்­லா­த­போது சாலை­யைக் கடக்க சாலைப் போக்­கு­வ­ரத்து விளக்கு இருக்­கும் வரை நடந்­து­செல்­வ­தற்­கான தேவை இருப்­ப­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை," என்று குறிப்­பிட்­டார்.

சாலைப் பாது­காப்பு குறித்து மூத்­தோ­ரி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது சவால்­மிக்க பணி என்று சிங்­கப்­பூர் சாலைப் பாது­காப்பு மன்­றம், மூத்­தோர் பகல்­நேரப் பரா­மரிப்பு நிலை­யங்­கள் போன்ற அமைப்­பு­கள் கூறின. சாலைப் பாது­காப்பு குறித்து மூத்­தோ­ரி­டம் ஒரு­மு­றைக்­குப் பல­முறை எடுத்­துக்­கூற வேண்­டி­யுள்­ள­தாக அவை குறிப்­பிட்­டன.

சட்­டம், ஆலோ­சனை ஒரு­பு­ற­ம் இ­ருக்க, ஒரு­வர் தமது பழக்­க­வழக்­கங்­களை மாற்­றிக்­கொள்­வ­தும் முக்­கி­யம் என்று சிங்­கப்­பூர் சாலைப் பாது­காப்பு மன்­றத் தலை­வர் பெர்­னர்ட் டே வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த ஆண்டு போக்­கு­வ­ரத்து போலி­சும் சிங்­கப்­பூர் சாலைப் பாது­காப்பு மன்­ற­மும் சேர்ந்து 'மூத்­தோ­ருக்­கான சாலைப் பாது­காப்பு 2020' எனும் இயக்­கத்­தைத் தொடங்­கி வைத்தன.

மூத்­தோ­ரி­டையே சாலைப் பாது­காப்பு குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த தாங்­கள் திட்­டங்­கள் சில­வற்றை உரு­வாக்­கி­ய­தாக நான்கு மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் குறிப்­பிட்­டன.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை விபத்துகளில் உயிரிழந்த மூத்த பாதசாரிகளின் எண்ணிக்கை 25க்கும் 28க்கும் இடைப்பட்டிருந்தது.