விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் பயின்றபோது இடியாய் வந்து விழுந்தது சபர்னாவுக்கு வந்த Hodgkin lymphoma என்னும் ஒருவித புற்றுநோய். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் சபர்னாவால் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.
"தொடக்கத்தில் நிறைய பயமும் பதற்றமும் இருந்தன. ஆனால் காலப்போக்கில் எனக்கு அது பழகிவிட்டது. என் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த கற்றுக்கொண்டேன். சூழ்நிலையை மாற்றி யமைக்க முயற்சி செய்வதைவிட, அந்தச் சூழ்நிலைக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிகளைக் கண்டுபிடிப்பது சாமர்த்தியமான ஒன்று என்பதை இந்த இரண்டாண்டுகளில் நான் கற்றுக்கொண்டேன்," என்று கூறிய சபர்னா, சிகிச்சையின்போதும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் நம்பிக்கையை இழக்காமல் திடமாக இருந்தார்.
இந்த சவால்களிலிருந்து மீண்டுவர சபர்ணாவிற்குத் துணையாக நின்றது அவரது குடும்பம். மருத்துவ நிபுணர்களிடமிருந்து சிகிச்சைக்கான ஆலோசனையைப் பெற உதவிய அண்ணன், சபர்ணாவின் உடல் ஆரோக்கியத்திற்காக வீட்டில் உணவு பழக்கவழக்கங்களை மாற்றி, தூங்கும் நேரத்தையும் மாற்றி துணையாக நின்ற பெற்றோர் என குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் இவருக்கு கிடைத்தன.
வீட்டிலும் பள்ளியிலும் கிடைத்த ஆதரவால் சபர்னா மீண்டும் தமது படிப்பைத் தொடர்ந்தார். கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம்
நடப்பில் இருந்தபோதும் அதற்குப் பின்னரும் இணையம் வழி கற்றல் அதிகமானபோது தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தி தனது கற்றல் வேகத்தைத் துரிதப்படுத்தினார்.
இணையம் வழி கற்றல் சபர்னாவுக்கு ஒரு வரமாக அமைந்தது. பாடங்களும் மற்ற பல நடவடிக்கைகளும் இணையத்திற்கு கொண்டுவரப்பட்டதால் சபர்னா அனைத்திலும் பங்குபெற்று, முழுமையான பள்ளி வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார். தனது வாழ்க்கையின் மிக கடினமான காலகட்டத்தில், சபர்னா தமது பாதையில் உள்ள இடையூறுகளைச் சமாளித்து படிப்பில் கவனம் செலுத்தினார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு ஏற்ப தமக்கு ஏற்பட்ட சவால்களை முறியடித்து தொடக்கக் கல்லூரி கல்வியை சபர்னா வெற்றிகரமாக முடித்துள்ளார்.

