சிங்கப்பூரின் பணவீக்கம் ஏறக்குறைய ஓராண்டு காலத்தில் முதன் முறையாக கூடி இருக்கிறது.
சேவைகளுக்கு ஆன செலவு கொஞ்சம் குறைந்ததும் கார் விலைகள், வீட்டு வாடகை அதிகமாக இருந்ததும் இதற்கான முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்தையும் உள்ளடக்கிய பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஜனவரியில் 0.2% கூடியது. இது டிசம்பரில் பூஜ்ஜியமாக இருந்தது.
சென்ற ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு ஒட்டுமொத்த பணவீக்கம் பூஜ்ஜியத்துக்கும் அதிகமாக ஆனது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், குடியிருப்பு, தனியார் சாலை போக்குவரத்துச் செலவுகளைச் சேர்க்காமல் கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கம் கொஞ்சம் கூடி சென்ற மாதம் -0.2 %ஆக இருந்தது.
இது டிசம்பரில் -0.3% என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வெளியிட்ட அறிக்கை கூறியது.
சேவைகளுக்கான செலவு கொஞ்சம் குறைந்ததை அடுத்து சென்ற மாதம் மூலாதார பணவீக்கம் கொஞ்சம் மேம்பட்டது.
விலைவாசி உயர்வும் மூலாதார பணவீக்கம் உயர்வும் தனியார் பொருளியல் வல்லுநர்கள் கணித்ததைப் போலவே இருந்தன. தனியார் போக்குவரத்துச் செலவு ஜனவரியில் 1.9% கூடியது. அதேபோலவே குடியிருப்புச் செலவு 0.5% கூடியது.
அரசாங்க வாடகை வீடுகளில் குடியிருப்போருக்குக் கொடுக்கப்படும் வாடகைத் தள்ளுபடிகள் காலாவதி ஆனதால் வாடகை வேகமான விகிதாச்சார அளவில் கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவை இப்படி இருக்க, சேவை களுக்கான செலவுகள் பெருமளவு குறையவில்லை. ஜனவரியில் இந்த இறக்கம் 0.3% ஆக இருந்தது. கடந்த நவம்பரில் இந்தச் செலவு 0.8% குறைந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
துணைப்பாடக் கட்டணம், இதர செலவுகளும் வழி நில்லா போக்குவரத்துச் சேவை கட்டணம் ஆகியவையும் அதிகமாயின.
சில்லறை மற்றும் இதர பொருட்கள் செலவு 1.3% இறங்கியது. டிசம்பரில் 1.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் சென்ற மாதம் 1.5% ஆகக் குறைந்தது.
மின்சாரம், எரிவாயுச் செலவும் சென்ற மாதம் 9.7% குறைந்தது.
இத்தகைய ஒரு சூழலில், இந்த ஆண்டில் மூலாதார பணவீக்கம் சராசரியாக 0% முதல் 1% வரை இருக்கும் என்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் -0.5%க்கும் 0.5% க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்றும் ஆணையமும் அமைச்சும் கணித்துள்ளன.

