பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக பெண் ஒப்புதல்

பணிப்பெண்ணுக்குக் காயம் விளைவித்ததைப் பெண் ஒருவர் ஒப்புக்கொண்டார். அந்த இந்தோனீசியப் பணிப்பெண் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் அவரை ஓங் சி மியேன் துன்புறுத்தினார்.

39 வயது ஓங்கிற்கு எதிராக அடுத்த மாதம் 4ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணின் பெயரை யூலியா என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. அவர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவர் சிங்கப்பூர் வந்ததில்லை.

வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களில் 33 வயது திருவாட்டி யூலியாவின் தலையில் உலோகக் கிண்ணத்தால் ஓங் அடித்தார். சமையலறையை திருவாட்டி யூலியா சரியாகப் பராமரிக்கவில்லை என்று ஓங் அதிருப்தி கொண்டதாகக் கூறப்படுகிறது. கிண்ணத்தால் திருவாட்டி யூலியாவை ஓங் பலமாக அடித்ததாகவும் அதன் காரணமாக அந்த உலோகக் கிண்ணம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. திருவாட்டி யூலியா வலியால் துடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திரும்பவும் பணிப்பெண் முகவைக்குச் செல்ல விரும்புவதாக ஓங்கின் கணவரிடம் திருவாட்டி யூலியா தெரிவித்தார். ஆனால் அதை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்த ஓங் தமது கணவரிடம் பேசியதற்காக திருவாட்டி யூலியாவை ஏசினார்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்து குளித்ததால் திருவாட்டி யூலியாவை ஓங் ஏசினார். ஆனால் ஓங்கின் மாமியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சீன மூலிகைகளைக் கொதிக்க வைத்ததாலும் வீட்டில் கழிவறைகளைக் கழுவ வேண்டியிருந்ததாலும் நேரம் கழித்து குளித்ததாக ஓங்கிடம் திருவாட்டி யூலியா விளக்கம் அளித்தார்.

ஆனால் திருவாட்டி யூலியாவின் விளக்கத்தை ஏற்க மறுத்த ஓங் தொலைபேசியால் அவரது தலையில் அடித்தார். தம்மை வேறு வீட்டுக்கு இடமாற்றம் செய்துவிடும்படி திருவாட்டி யூலியா மீண்டும் ஓங்கிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவ்வாறு செய்ய ஓங் மறுத்துவிட்டார். மாறாக, அவரை இந்தியாவுக்கு இடமாற்றம் செய்யப்போவதாக திருவாட்டி யூலியாவிடம் கூறினாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 24ல், தமது 4 வயது மகனுக்கு தவறான ஆடைகளை அணிவித்ததாகக் கூறி திருவாட்டி யூலியாவை ஓங் அறைந்தார். இதனால் திருவாட்டி யூலியாவின் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தது. இதையடுத்து, ஓங் தமது மகனுடன் வெளியே சென்றதும் தமது உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார் திருவாட்டி யூலியா. அப்போது அவரிடம் இந்தோனீசிய நாணயங்கள் மட்டுமே இருந்தன. அவர் அத்தனை நாட்கள் வேலை செய்ததற்கு சம்பளம் தரப்படவில்லை.

இந்நிலையில், ஜாலான் காயு வட்டாரத்தில் அந்நியர் ஒருவரின் உதவியை திருவாட்டி யூலியா நாடினார். இதனைத் தொடர்ந்து, போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி யூலியா கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஓங் மனஅழுத்தத்தாலும் பதற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் அமர்ஜீத் சிங் தெரிவித்தார். அதை நிரூபிக்கும் வகையில் மூன்று மனநலக் கழக அறிக்கைகளை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ஓங் தற்போது மனநலக் கழகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக திரு சிங் கூறினார். கட்டாய சிகிச்சை உத்தரவுக்கு அவரை மதிப்பீடு செய்யுமாறு நீதிமன்றத்தை திரு சிங் கேட்டுக்கொண்டார். கட்டாய சிகிச்சை உத்தரவு விதிக்கப்படுவோர் சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக மனநல சிகிச்சை பெறுவர்.

ஆனால் குறைந்தது எட்டு மாதங்களுக்கு ஓங் சிறையில் இருக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர் வாதிட்டார். இரண்டாவது குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட மனஅழுத்தம் ஓங்கின் சுய கட்டுப்பாட்டை ஓரளவுக்கு மட்டுமே பாதித்ததாக அவர் கூறினார். திருவாட்டி யூலியாவுக்கு ஓங் $5,200 இழப்பீடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

பணிப்பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகப் பதிவான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஓங்கிற்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, $7,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!