கொவிட்-19 சோதனை மின்னிலக்கச் சான்றிதழ்கள்

கொவிட்-19 சோதனை மின்னிலக்கச் சான்றிதழ்கள்

2 mins read
161ff4d6-4dd3-47bb-bdcc-6c92d7dd9caf
சுகா­தார அமைச்சு ஒப்­பு­தலுடன் இருக்கும் கொவிட்-19 சோதனை முடிவுகள் மின்­னி­லக்­கச் சான்­றி­தழைப் பயணிகள் விமான நிலையத்தில் காட்ட வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பய­ணத்­துக்கு முந்­திய கொவிட்-19 சோதனை நடத்த அங்­கீ­கா­ரம் பெற்ற சிங்­கப்­பூர் மருந்­தகங்­கள் இனி சோதனை முடி­வு­களை தற்­போ­தைய தாளி­னா­லான சான்­றி­தழ்­க­ளுக்­குப் பதி­லாக மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­க­ளாக அளிக்க வேண்­டும்.

இந்த மாற்­றம் இம்­மா­தம் 10ஆம் தேதி தொடங்­கப்­பட இருந்­தது. ஆனால், எல்லா மருந்­த­கங்­களும் இந்­தப் புதிய விதி­மு­றைக்­குத் தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள அவற்­றுக்கு ஒரு மாத கால அவ­கா­சம் கொடுக்­கப்­பட்டு உள்­ளது என்று அறி­வார்ந்த தேசத் திட்­டத்­துக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

"இந்­தப் புதிய மின்­னி­லக்­கச் சான்­றி­தழ் அளிக்­கும் திட்­டம் ஹெல்த்­செர்ட்ஸ் திட்­டத்­தைச் சார்ந்­துள்­ளது.

"கொவிட்-19 சோதனை முடி­வு­க­ளைத் தெரி­விக்­கும் மின்­னி­லக்­கச் சான்­றி­தழ் அளிக்­கும் திட்­டத்­தால் முன்பு தாள் வடி­வில் அளிக்­கப்­பட்ட சான்­றி­தழ் கிழிய வழி இருக்­காது. மேலும் மின்­னி­லக்க வடி­வில் இருப்­ப­தால், உள்­ளூர் மற்­றும் வெளி­நாட்டு விமான நிலை­யங்­களில் பய­ணத்­தைப் பதிவு செய்­யும்­போ­தும் சுங்­கச் சாவ­டி­யைக் கடக்­கும்­போது இல­கு­வாக இருக்­கும் என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

"அந்த மின்­னி­லக்­கச் சான்­றி­த­ழுக்கு சுகா­தார அமைச்சு ஒப்­பு­தல் அளித்­தி­ருக்க வேண்­டும். அப்­போ­து­தான் அது விமான நிலை­யங்­க­ளி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என்­றும் டாக்­டர் விவி­யன் விளக்­கி­னார்.

இந்­தச் சான்­றி­தழ் அர­சாங்கத்­தின் அறி­விப்பு இணை­யத்தளத்­தில் (www.notarise.gov.sg) பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட பின்­னர், மின்­னி­லக்­கச் சான்­றி­த­ழைப் பதி விறக்­கம் செய்­யும் 'க்யூ­ஆர்' குறி­யீடு பய­ணி­க­ளுக்கு அனுப்­பப்­படும்.

விமான நிறு­வன மற்­றும் குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் அந்த 'க்யூ­ஆர்' குறி­யீட்டை வருடி, அந்த மின்­னி­லக்­கச் சான்­றி­தழ் உண்­மை­யா­னதா என்று அர­சாங்­கத்­தின் தொழில்­நுட்ப அமைப்பு உரு­வாக்­கிய இணை­யத்­த­ளத்­தில் அது சுகா­தார அமைச்­சால் அங்­கீ­க­ரிப்­பட்­டதா என்று சோதித்­துப் பார்ப்­பார்­கள்.

இந்த மின்னிலக்கச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தடுப்பூசி திட்டத்துக்கும் நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.