இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இரண்டாவது பிள்ளை உடைய பெற்றோருக்கு குழந்தை மேம்பாட்டுக் கணக்கு மூலம் கூடுதல் நிதியாக $9,000 கிடைக்கும்.
தற்போது முதலாவது, இரண்டாவது பிள்ளைக்கு பெற்றோருக்கு $3,000 வழங்கப்படுகிறது. அது இனி $6,000 ஆக உயர்த்தப்படுகிறது. இது முன்பு முதல் பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த $3,000க்கு மேல் கூடுதல் நிதியாக அளிக்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
இந்தக் கூடுதல் நிதி மூலம் கிட்டத்தட்ட 12,000 பிள்ளைகள் ஆண்டுதோறும் பயன்பெறுகின்றன. இது இரண்டாவது பிள்ளையாக ஜனவரி 1ம் தேதி மற்றும் அதற்குப் பிறகு பிறக்கும் சிங்கப்பூர் பிள்ளைகளுக்குப் பொருந்தும்.
குழந்தை போனஸ் திட்டத்தின் கீழ், குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் பெற்றோர் நிரப்பும் பணத்துக்கு வெள்ளிக்கு வெள்ளி அரசாங்கம் ஒரு வரம்பு வரை நிதி ஆதரவு அளிக்கும்.
இந்த அதிகரிப்புடன், இரண்டாவது பிள்ளையின் குழந்தை மேம்பாட்டுக் கணக்குக்கு அரசாங்கத்தின் மொத்த பங்களிப்பு $9,000 ஆகிறது.
இது முதலாவது, இரண்டாவது பிள்ளைக்கு $6,000, மூன்றாவது, நான்காவது பிள்ளைக்கு $12,000, அதற்கு அடுத்துள்ள பிள்ளை மற்றும் பிள்ளைகளுக்கு $18,000 என்று அரசாங்கம் வழங்கி வந்த ஆதரவு நிதியின் அளவு உயர்கிறது.
குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் உள்ள தொகையைக் கொண்டு அங்கீகாரம் பெற்ற கழகங்கள் வழங்கும் குழந்தைப் பராமரிப்புக்கான கட்டணம், மருத்துவச் செலவுகள் மற்றும் இதர செலவுகள் என்று பிள்ளைகளின் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு பிள்ளைக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கு மேம்பட்ட நிதி ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் இந்தத் தொகை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது என்றார் தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாளர் பிரிவை மேற்பார்வையிடும் குமாரி இந்திராணி.
ஒட்டுமொத்தமாக, இரண்டாவது பிள்ளை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு $24,000 கிடைக்கும். அதில் குழந்தை போனஸ் ரொக்கப் பரிசு, குழந்தை ஆதரவு மானியம், புதிய குழந்தைகளுக்கான மெடிசெவ் மானியம் ஆகியவை உள்ளடங்கும்.
"பெரும்பாலான திருமணமான சிங்கப்பூரர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு ஒரு குழந்தைதான் உள்ளது.
"கடந்த ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் 1.1 புள்ளி. அது சாதனை அளவில் மிகக் குறைவு. இது 2018லும் 2019லும் இருந்த 1.4 புள்ளிக்கும் குறைவானது, " என்றார் அமைச்சர்.
"கொவிட்-19 நிலைமை சிங்கப்பூரர்கள் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட வைத்துள்ளது. அதனால் 2019ல் நிகழ்ந்த திருமணங்களைவிட கடந்த ஆண்டில் சுமார் 10% குறைவாக நடைபெற்றது. மற்றவர்கள் பெற்றோராகும் தங்கள் திட்டத்தை ஒத்திப் போட்டுள்ளனர்.
"குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது முன்னேறிய சமூகங்களில் பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும், திருமணம் புரிந்துகொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பப்படுவோருக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்," என்றார் குமாரி இந்திராணி.
கடந்த ஆண்டு அக்டோபரில் கொள்ளைநோய் காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில், குழந்தை ஆதரவு மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி மாத இறுதிவரை, கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள் $3,000 பெறும் இம்மானியத்தைப் பெற்றுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

