படிப்படியாக உயரும் சம்பள முறை இப்போது இருப்பதைக் காட்டிலும் இருமடங்குக்கு மேல் அதிக ஊழியர்களை உள்ளடக்கும் விதத்தில் விரிவாக்கப்படும் என மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்து உள்ளார்.
தற்போது 85,000 ஊழியர்கள் இந்த சம்பளமுறையின்கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 218,000 ஆக அதிகரிக்கும் என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். உணவுச் சேவை மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளில் 80,000 உள்ளூர் ஊழியர்கள் வரை இந்த விரிவாக்கத்தில் இடம்பெறுவர். இந்தத் துறைகளில்தான் குறைந்த வருமான ஊழியர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களோடு வளாகங்களுக்குள் சுத்திகரிப்புப் பணி செய்வோர், பாதுகாவல் அதிகாரிகள், நிலவனப்புப் பராமரிப்பு ஊழியர்கள் போன்ற மேலும் 50,000 ஊழியர்களும் படிப்படியாக உயரும் சம்பளமுறை விரிவாக்கத்தில் இடம்பெறுவர். தற்போது, வெளியிலிருந்து அனுப்பப்படும் துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நிலவனப்புப் பராமரிப்பாளர்களுக்கு மட்டும் இந்த சம்பள முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மின்தூக்கி, மின்படிக்கட்டுப் பராமரிப்புத் துறையில் உள்ள 2,400 ஊழியர்களுக்கும் இந்தச் சம்பள முறை கட்டாயமாகிறது.
அடுத்தகட்டமாக கழிவு நிர்வாகத் துறையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கும் இதனை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இத்துறையில் 3,000 ஊழியர்கள் வரை பலனடைவர்.
மனிதவள அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திரு ஸாக்கி, புதிய துறைகளுக்கு இந்த சம்பள முறையை விரிவாக்கம் செய்வதற்காக அரசாங்கம், தொழிலாளர் இயக்கம், முதலாளிகள் சங்கம் போன்றவற்றை உள்ளடக்கிய குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றார். இக்குழு தனது பரிந்துரைகளை இவ்வாண்டு இறுதிக்குள் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
படிப்படியாக உயரும் சம்பள
முறையின் பலன்களை உதாரணம் ஒன்றின் மூலம் திரு ஸாக்கி விளக்கினார். எல்வின் கோ, 50, என்பவர் 2017ஆம் ஆண்டு பாதுகாவல் துறையில் வேலையில் சேர்ந்தபோது அவருக்கான மாதச் சம்பளம் $1,800. இந்தச் சம்பளமுறையின் கீழ் திறன் பயிற்சி பெற்றதன் மூலம் தற்போது 50 விழுக்காட்டுக்கும் அதிகமான சம்பள உயர்வை அவர் பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மற்ற துறைகளில் பணிபுரியும் 80,000 சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள் $1,000க்கும் குறைவான சம்பளம் பெறுவதாக பாட்டாளிக் கட்சி உறுப்பினர் கூறியதற்குப் பதிலளித்த திரு ஸாக்கி, சில மணி நேரமே வேலை செய்யக்கூடிய பகுதிநேர ஊழியர்களை உள்ளடக்கிய கணக்கு அது என்றார்.

