துவாசில் ஒரு வாரத்துக்கு முன்பு நிகழ்ந்த வெடிப்பு மற்றும் தீச்சம்பவத்தில் காயமடைந்த 10 ஊழியர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தீவிர கண்காணிப் புப் பிரிவுக்கு மாறியுள்ளனர்.
இந்தத் தகவலை வெளிநாட்டு ஊழியர் நிலையம் தனது நேற்றைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது. அந்த ஊழியர்கள் தங்களது குடும்பத்தாருடன் காணொளி அழைப்பு வாயிலாக பேசவும் அந்த நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
அந்த விபத்தில் காயமடைந்த மற்றோர் ஊழியர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கிய மூவர் உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் வீடு திரும்பினர்.
கடந்த புதன்கிழமை எண்32E துவாஸ் அவென்யூ 11ல் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீ பாதுகாப்பு அமைப்புகளைக் கையாளும் ஒப்பந்த நிறுவனமான ஸ்டார்ஸ் என்ஜினியரிங் நிறுவன வளாகத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அந்தப் பகுதியில் இருந்த 65 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
அடைக்கப்பட்ட சூழலில் உருளைக்கிழங்கு மாவுப்பொருள் சேர்ந்ததே இந்த வெடிப்புக்குக் காரணம் என மனிதவள அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய தூசு தீப்பொறியுடன் தொடர்பு ஏற்பட்டால் வெடிக்கும்.
இந்த விபத்தில் 38 வயதான திரு மாரிமுத்து, 23 வயதான திரு ஷோஹெல் முகமது, 29 வயதான திரு அனிஸுஸமான் முகமது ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
வெளிநாட்டு ஊழியர் நிலையம், கட்டட கட்டுமான மற்றும் மரத்துண்டு தொழிற்சாலைகள் ஊழியர்களின் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மாண்டவர்களுக்கு நேற்று இறுதி மரியாதையைச் செய்தனர். நண்பர்கள், உறவினர்கள் என 30 பேர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இறந்த ஊழியர்களின் நல்லுடல்கள் இந்தியா, பங்ளாதேஷில் உள்ள அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பணிபுரியும் மாரிமுத்துவின் இளைய சகோதரர் திரு மாரிமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ் அமைப்பு $600,000க்கும் அதிகமான நிதியைத் திரட்டியிருப்பதாகக் கூறப்பட்டது.

