போலிசாரிடம் அனுமதி பெறாமல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு ஆதரவான வாசகம் உள்ள அட்டையை ஏந்தியது தொடர்பாக நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கிடம் போலிஸ் விசாரணை நடத்தப்படுகிறது.
ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்துக்குச் சென்ற திரு இங், அங்கு தாம் உணவுக் கடைக் காரர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட படங்களைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்தார்.
உணவு அங்காடி நிலையத்தில் இருந்தபோது 'இவர்களுக்கு ஆதரவு அளியுங்கள்' என்று அங்குள்ள கடைக்காரர்களுக்கு ஆதரவான வாசகத்தைக் கொண்ட அட்டையை ஏந்தி அவர் படமெடுத்துக்கொண்டார். உணவு அங்காடி நிலையத்துக்குச் செல்ல குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தாம் அவ்வாறு செய்ததாக திரு இங் நேற்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். ஆனால், அனுமதி பெறாமல் பொது இடத்தில் கூட்டம் கூட்டிய குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என திரு இங்கிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தில் வழக்கமான சுற்று உலாவில் ஈடுபட்டிருந்ததாக நேற்று திரு இங் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து போலிசார் தம்மிடம் வாக்குமூலம் கேட்டுள்ளதாகவும் அவர்களிடம் தாம் விளக்கம் அளித்துள்ளதாகவும் திரு இங் தெரிவித்துள்ளார்.
அனுமதி இல்லாமல் பொது இடங்களில் கூட்டம் கூட்டுவோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

