தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சாரக் கட்டணம் உயரக்கூடும்

2 mins read
51e6a907-5412-4f5d-b670-d8b85bd91381
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மின்சார தேக்குதிறன் மிகையாக இருந்த சூழல் இயல்புநிலைக்குத் திரும்புவதாலும் எரிபொருள் விலை அதிகரித்து வருவதாலும் மின்சாரக் கட்டணம் உயரக்கூடும் என வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

ஆயினும், விலையேற்றமும் ஏற்ற இறக்கங்களும் சமாளிக்கப்படும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

"மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும், அந்த உயர்வு படிப்படியாக இருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் தன்னால் ஆனதைச் செய்யும். அதிகப்படியான விலையேற்றம் இருப்பின் அதைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று டாக்டர் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதிகப்படியான தேவை இருக்கலாம் என்று பத்தாண்டுகளுக்குமுன் கணிக்கப்பட்டதால் அதைப் பூர்த்திசெய்ய ஏதுவாக மின்உற்பத்தி நிறுவனங்கள் மிகை தேக்கு திறனை உருவாக்கி இருந்தன. ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக, மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக, உற்பத்தி விலையைக் காட்டிலும் மின்சாரக் கட்டணம் குறைந்தது.

ஆனாலும், கூடிய விரைவில் மின்சார மிகை தேக்குதிறன் சூழல் தணிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், மின்சாரக் கட்டணம் உயர்வதைத் தவிர்க்க முடியாது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் மனிதவள இரண்டாம் அமைச்சருமான டாக்டர் சான் குறிப்பிட்டார்.

"இடைக்காலம் முதல் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, மின்சாரக் கட்டணம் வழக்கநிலைக்குத் திரும்புவது தவிர்க்க முடியாதது. வர்த்தக ரீதியில் செயல்படும் எந்த ஒரு நிறுவனமும் எப்பொழுதும் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைவாக விற்காது," என்று அரசாங்கத்தின் நீடித்த நிலைத்தன்மைத் திட்டங்களைப் பற்றிய விவாதத்தின்போது டாக்டர் டான் கூறினார்.

பெருகி வரும் தரவு மையங்கள், வாகனங்கள் மின்மயமாதல் போன்ற காரணங்களால் மின்சாரத் தேவை அதிகரித்து வருவதையும் அதனால், மொத்த விற்பனை மின்கட்டணம் உயர்ந்து, இயல்புநிலை எட்டப்படலாம் என்றும் அவர் சொன்னார்.