மின்ஸ்கூட்டர், மின்சார மிதிவண்டி ஆகியவற்றை ஓட்டுபவர்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயமாகிறது. இவ்வாண்டு நடுப்பகுதி முதல் அது நடப்புக்கு வருகிறது.
போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் நேற்று முன்தினம் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடப்பில் உள்ள விதிகள் மற்றும் நடதைவிதித் தொகுப்பு போன்றவற்றை அத்தகைய வாகன ஓட்டுநர்கள் நன்கு அறிந்திருப்பதை இந்தத் தேர்வு உறுதி செய்யும் என்றார் அவர்.
தமது அமைச்சின் செலவின மசோதான மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திரு பே, பாதுகாப்பான பயணத்தை மேம்படுத்து வதில் மேலும் ஒரு நடவடிக்கை இது என்றார்.
எந்தத் தேதியில் இருந்து இந்தத் தேர்வுமுறை நடப்புக்கு வரும் என்று அவர் குறிப்பிடவில்லை என்றபோதிலும் தேர்வுக்கான கையேடு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றார்.
கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டிய யோசனையை துடிப்புடன் நடமாடுவதற்கான ஆலோசனைக் குழு முதன்முதலாக 2019 செப்டம்பரில் பரிந்துரைத்திருந்தது.
விதிகளுக்கு இணங்காத வகையில் தயாரிக்கப்பட்ட மின்ஸ்கூட்டர் ஒன்று அதிவேகமாக மோதியதன் காரணமாக சைக்கிளோட்டி ஒருவர் மாண்டதாலும் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான விபத்துகள் கூடியதாலும் குழு அந்த யோசனையைத் தெரிவித்திருந்தது.
திரு பே, மேலும் ஓர் அறிவிப்பை மன்றத்தில் வெளியிட்டார். வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுப் பாதைகளிலும் சாலைகளிலும் இயக்கப்படும் எல்லாவித மிதிவண்டிகளும் 'ஹேண்ட்பிரேக்' எனப்படும் கையால் இயக்கும் நிறுத்துவிசையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அந்த அறிவிப்பு.
பொதுப் பாதைகளை பாதுகாப்பான முறையிலும் கருணையுடனும் பகிர்ந்துகொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய பிரசார இயக்கம் ஒன்று மே மாதம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

