ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் ஆரம்பத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் குறைக்கப்பட்ட 6வது நபருக்கு நேற்று முன்தினம் நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
டான் ஹோங் ஷெங், 24, மீதான குற்றச்சாட்டு, ஆயுதங்களை வைத்திருந்தவருடன் இருந்ததாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஜூலை 2ஆம் தேதி நடந்த கொலைச் சம்பவத்தில் தண்டிக்கப்பட்டுள்ள 6வது நபர் இவர்.
ஆர்ச்சர்ட் டவர்ஸில் 31 வயது சத்தீஷ் நோயல் கோபிதாஸ் தாக்கப்பட்டபோது கூர்மையான வளைவு கொண்ட கத்தியை வைத்திருந்த தற்போது 29 வயதாகும் டான் சென் யாங்குடன் இருந்ததை டான் ஹோங் ஷெங் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் தொடர்பில்லாத இரு வேறு கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். ஆரம்பத்தில் சத்தீஷை கொலை செய்ததாக ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அவர்களில் ஒருவர் டான் ஹோங் ஷெங். இந்த வழக்கில் டான் சென் யாங் என்பவர் மட்டும் தற்போது கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
இதர ஆறு பேர் மீதான குற்றச் சாட்டு குறைக்கப்பட்டு தீவிரமில்லாத தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
டான் ஹோங் ஷெங்கின் வழக்கறிஞர்களான இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஜோஸ்பஸ் டானும் திரு கோரி வோங்கும் சத்தீஷ் தாக்கப்பட்டபோது அதில் தமது கட்சிக்காரர் பங்கேற்கவில்லை என்றும் தடுக்கவே முயற்சி செய்தார் என்றும் நீதிமன்ற விசாரணையில் கூறியிருந்தனர்.

