சிங்கப்பூரில் இளம் மாதர்களின் கனவு நனவாகி அவர்கள் வெற்றிகரமாகத் திகழ ஒவ்வொருவரும் உதவ முடியும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
குடும்பம், பிள்ளைகளைப் பேணிவளர்ப்பது போன்ற பொறுப்புகள் பெண்களுக்குத்தான் என்று வழிவழியாக இருந்து வரும் மனப்போக்கை மாற்றிக்கொள்வது; பெண்களின் முயற்சிகளில் உறுதுணையாக இருந்து உதவுவது;
குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது முதலான காரியங்கள் மூலம் எல்லாருமே உதவ முடியும் என்று அதிபர் குறிப்பிட்டார். இத்தகைய உதவிகள் மூலம் ஏற்படக்கூடிய பலன்கள் மிக அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பெண்கள் மேம்பாடு தொடர்பான பல கலந்துரையாடல்கள் நடந்து வந்துள்ளன. குடும்பப் பொறுப்பு பெண்களுக்குத்தான் என்ற சமூகத்தின் மனப்போக்கு மாற வேண்டும் என்பதே அந்தக் கலந்துரையாடல்கள் மூலம் தெரிய வந்திருக்கும் அம்சம் என்று அதிபர் கூறினார்.
அனைத்துலக மாதர் தினம் நாளை திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மெண்டாக்கி மனமகிழ் மன்றம் நேற்று இளம் மாதர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொண்ட அதிபர், 20 முஸ்லிம் மாதர்களைச் சிறப்பிக்கும் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
மெண்டாக்கி மனமகிழ் மன்றத்தைச் சேர்ந்த 50 இளம் தொண்டூழியர்கள் அந்தப் புத்தகத்தை இரண்டு ஆண்டு காலமாக எழுதி உருவாக்கி வந்தனர்.
பல்வேறு வகைகளில் வெற்றிகளைக் குவித்து இருக்கும் 20 முஸ்லிம் மாதர்களின் சாதனைகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கின்றன.
இசைக் கலைஞர்கள் முதல் மனிதாபிமான உதவிகள், உணவங்காடித் தொழில் வரை பலவற்றிலும் அந்த மாதர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.
மீள்திறன், துணிச்சல், கடப்பாடு ஆகியவற்றுடன் அந்த மாதர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கிக்கொண்டதோடு சாதனைகளையும் புரிந்துள்ளனர்.
புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் தொகை காசா ராவ்தா என்ற அறப்பணி அமைப்புக்குச் செல்லும். இந்த அமைப்பு, குடும்ப வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்படும் மாதர்கள், பிள்ளைகளுக்கு உறைவிடம் அளித்து உதவுகிறது.
பொதுமக்கள் giving.sg/campaigns/ywildpledgeabook. என்ற முகவரிக்குச் சென்று புத்தகத்தை வாங்கலாம்.
அதோடு, தங்கள் ஆதரவையும் தெரியப்படுத்தலாம்.
வெற்றிகரமான 20 முஸ்லிம் பெண்களின் சாதனைகளை விவரிக்கும் புத்தகம் வெளியீடு

