சிங்கப்பூரில் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமாக 117,000க்கும் அதிக அலகு (யூனிட்) ரத்தம் 2020ல் நன்கொடை மூலம் சேகரிக்கப்பட்டது.என்றாலும் சென்ற ஆண்டில் ரத்த நன்கொடை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது.
கடந்த 2017ல் ஏறக்குறைய 116,000 அலகு ரத்தம் நன்கொடை செய்யப்பட்டது. அது, இங்கு 32,000 பேருக்கும் அதிக நோயாளிகளுக்கு நன்மை பயத்தது. சென்ற ஆண்டு ரத்த நன்கொடை அதிகமாக இருந்தது ஏன் என்பதை விளக்கிய இந்தச் சங்கம், பல முறை ரத்த நன்கொடை செய்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக இருந்ததே அதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டது.
ஒரு முறைக்கு மேலும் ரத்த நன்கொடை வழங்கியவர்களின் அளவு 2019ல் 37 விழுக்காடாக இருந்தது. இது 2020ல் 42 விழுக்காடாகக் கூடியது. 2016க்குப் பிறகு இந்த அளவே ஆக அதிகம். ரத்த நன்கொடையாளர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை என்ற கணக்கில் ஓராண்டுக்கு நான்கு முறை ரத்த நன்கொடை செய்யலாம். சென்ற ஆண்டில் முதன்முதலாக ரத்தம் வழங்கியவர்களின் எண்ணிக்கையும் 28 விழுக்காடாகக் கூடியது. இது 2019ல் 23 விழுக்காடாக இருந்தது.
கொவிட்-19 காரணமாக சென்ற ஆண்டில் பொருளியல் முடக்கம் தொடங்கியபோது ரத்த நன்கொடை குறைவாக இருந்தது. இருந்தாலும், அன்றாட ரத்த நன்கொடை குறைவாக இருப்பது பற்றி ஊடகங்களில் தகவல்கள் வெளியானதும் இந்தச் சங்கம் இடைவிடாமல் ரத்த நன்கொடையாளர்களுக்கு கோரிக்கை விடுத்ததும் அதிகமான நன்கொடையாளர்கள் ரத்தம் அளிக்க முன்வந்ததற்கான காரணங்களாக இருந்தன.
நன்கொடையாளர்கள் வெகு வேகமாகச் செயல்பட்டார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரும் தலைமை நிர்வாகியுமான பெஞ்சமின் வில்லியம் கூறுகிறார். சென்ற ஆண்டில் தேவைப்பட்ட அளவிற்கு ரத்தத்தை நன்கொடையாக இந்தச் சங்கம் பெற முடிந்தது. இருந்தாலும் நாட்டிற்குப் பாதுகாப்பான ரத்தம் போதிய அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த மேலும் பலவற்றைச் செய்ய வேண்டி இருக் கிறது என்றார் திரு வில்லியம்.
ஒருவர் ஒரு நேரத்தில் ஓர் அலகு ரத்தத்தை நன்கொடையாக வழங்குகிறார். அன்றாடம் 400 அலகுகள் ரத்தம் தேவைப்படுகிறது. அதோடு மட்டுமின்றி நன்கொடை பெறப்படும் ரத்தத்தின் ஆயுளும் குறைவு. அதிலிருக்கும் சிவப்பு அணுக்கள் ஆறு வார காலம்தான் உயிர்ப்புடன் இருக்கும். ரத்தத் தட்டுகள் ஐந்து வார காலமே உயிர்ப்புடன் இருக்கும். ஆகையால் நிலையாக ரத்த நன்கொடைக்குத் தேவை இருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் மக்களில் ஏறத்தாழ 1.8 விழுக்காட்டினர் மட்டுமே ரத்த நன்கொடையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஐந்தில் ஏறக்குறைய இரண்டு பங்கினர் ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேலும் ரத்தம் கொடுக்கிறார்கள். ரத்த நன்கொடை என்பது பொதுமக்களின் தேசிய பொறுப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று திரு வில்லியம் கருத்து தெரிவித்தார்.

